வேலு நாச்சியார் போன்ற வீர பெண்மணிகள் தேவை : வைகோ பேச்சு
வேலு நாச்சியார் போன்ற வீர பெண்மணிகள் தேவை : வைகோ பேச்சு
ADDED : ஜூலை 24, 2011 12:02 AM

சென்னை : 'தமிழ் இனத்துக்கு, வேலு நாச்சியார் போன்ற வீரப் பெண்மணிகள் தேவை' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.
இந்திய விடுதலைப் போர் வரலாற்றில், வெள்ளையர்களை வென்று சரித்திரம் படைத்த வேலு நாச்சியாரின் வரலாறு, நடன, நாடகமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அரங்கேற்றப்பட்டது. இந்த மேடை நாடகத்தை, ஸ்ரீராம் சர்மா இயக்கியிருந்தார். இதற்கு, நாத சாகரம் ரகுநாதன் இசையும், பரதாஸ்யம் நிறுவன தலைவர், 'சௌம்ய குரு' மணிமேகலை சர்மா, நடன இயக்கமும் செய்திருந்தனர்.
இதில் பங்கேற்று, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: இந்திய விடுதலை வரலாற்றில், வீரப் பெண்மணிகளுள் ஒருவரான ஜான்சி ராணி தோற்கடிக்கப்பட்டார். ஆனால், அதற்கு முன்பே, 17ம் நூற்றாண்டில், சிவகங்கையைச் சேர்ந்த வீரப் பெண்மணி வேலு நாச்சியார் மீட்டெடுத்தார். வேலு நாச்சியாரின் வீர வரலாறே இந்த மேடையில் நாடகமாக அரங்கேறியது. தமிழினத்தின் வீர வரலாற்றை கலைநயத்தோடு அனைவரும் காண வேண்டும் என்ற நோக்கில், இந்த நாடகம் உருவாக்கப்பட்டது. நாடகத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும், தமிழனின் வீரத்துக்கு மிஞ்சியவர் யார், என்ற உணர்ச்சியை தூண்டும் விதம் இருந்தது.
தமிழ் இனத்துக்கு, வேலு நாச்சியார் போன்ற வீரப் பெண்மணிகள் தேவை. இந்த நாடகத்தை தயாரித்தவன் நான் அல்ல. நான் ஊக்கம் மட்டுமே படுத்தினேன். கலைஞர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதை, நாடகமாக அரங்கேற்றினர். தற்போது, தமிழகத்தில் தமிழனின் பண்டைய கலைகள் அழிந்து வருகின்றன. இந்த நாடகத்தை, தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்த வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.
விழாவில், திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்று நாடகத்தை கண்டுகளித்தனர்.