இன்று முதல் வீடு வீடாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம்
இன்று முதல் வீடு வீடாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம்
ADDED : ஜூலை 07, 2025 12:07 AM

சென்னை: 'மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்க்க, வீடுதோறும் விண்ணப்பம் வழங்கும் பணி இன்று துவங்க உள்ளது.
'மாநிலம் முழுதும் உள்ள மகளிருக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்' என, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது.
அதன்படி, இத்திட்டத்தில் சேர, 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர்.
பயனாளிகளை தேர்வு செய்ய, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், 1.06 கோடி பேருக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்படாதவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து, விண்ணப்பங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, தற்போது 1.15 கோடி பேருக்கு, மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மூன்று விதிமுறைகளில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறும் குடும்ப பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை இனி கிடைக்கும்.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய முதியோர் ஓய்வூதியம், அரசு ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், திட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இதையடுத்து, புதிய பயனாளிகளை அடையாளம் காண, இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான பணியில் ஒரு லட்சம் தன்னார்வலர்களை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஈடுபடுத்த உள்ளது.