அறிவியல் அதிசயங்கள்; அழகு தமிழில்! - அசத்தும் விஞ்ஞானி எழுத்தாளர்
அறிவியல் அதிசயங்கள்; அழகு தமிழில்! - அசத்தும் விஞ்ஞானி எழுத்தாளர்
ADDED : பிப் 26, 2023 12:53 PM

ஒரு கண்டுபிடிப்பிற்குள் ஒளிந்திருக்கும் விஞ்ஞானியின் உழைப்பு, அற்பணிப்பு நம்மில் பலருக்கு தெரிவது இல்லை. அதன் அவசியத்தை உணர்ந்து விஞ்ஞானத்தின் விந்தைகளை, பாமரனும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில், புத்தகங்களை எழுதி சிறந்த எழுத்தாளராக மாறியுள்ளார், கேரள மாநிலம் திருவனந்தபுரம் விக்ரம் சராபாய் விண்வெளி மைய இஸ்ரோ விஞ்ஞானி பி.சசிக்குமார் 41.
இவர் விண்வெளி மனிதர்கள், வானவாசிகள், தரமே தாரக மந்திரம், கைத்தறியும் கணிப்பொறியும், விண்ணுார்தி, ரயிலே ரயிலே, நில் கவனி அறிந்துகொள், கையெட்டும் துாரத்தில் இலக்கு, ஆதியும் அந்தமும் (பிரபஞ்சத்தின் வரலாறு), உடைக்காமல் என்னை கண்டுபிடி ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.
தினமலர் வாசகர்களுக்காக இவரது மனம்திறந்த பேட்டி:
உங்களைப்பற்றி
சொந்த ஊர் ஈரோடு, படித்தது அரசு பள்ளியில் தமிழ் வழிகல்வி, அப்பா, அம்மா கைத்தறி நெசவு செய்தனர். சிறு வயது முதல் அதனையும் கற்று கொண்டேன். அப்பா பெரியசாமி, அம்மா கமலம், அண்ணன் குணசேகரன் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். எல்லாரும் சேர்ந்து என்னை பி.டெக்., படிக்க வைத்தனர். பிறகு எம்.டெக்., அரசு நிதியுதவியில் படித்தேன். தற்போது இஸ்ரோவில் 'ராக்கெட்' செல்லும் போது வெளிவரும் புகையின் தரம் குறித்து சான்றிதழ் வழங்கும் துறையில் உள்ளேன். இதுதொடர்பாக 'தரமே தாரக மந்திரம்' என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளேன்.
புத்தகம் எழுத காரணம் என்ன
இதுவரை நுாறு பள்ளிகள் வரை சென்று பேசியிருக்கிறேன். கடந்த 2006 முதல் தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறேன். அப்போது தான் தமிழில் அறிவியல் சார்ந்த நுால்கள் அவ்வளவாக இல்லை என தெரிந்து கொண்டேன். எதற்காக விண்வெளி செல்ல வேண்டும் என்பதை முதல் புத்தகமாக 'விண்வெளி மனிதர்கள்' என்ற தலைப்பில் எழுதினேன். இதனை படித்த பலரும் துறை சார்ந்த நபர்கள் புத்தகம் எழுதும்போது நன்றாக உள்ளது என பாராட்டினர். அந்த ஊக்கத்தால் தற்போது வரை 10 புத்தகங்கள் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதி வருகிறேன். அலுவலகத்திற்குள் அலைபேசி அனுமதி இல்லை. இதனால் காலை 4:00 மணிக்கு எழுந்து 'வாய்ஸ் டைப்பிங்' மூலம் புத்தகம் எழுதுவேன்.
விஞ்ஞானி ஆவது கடினமா
ஒரு வேலைக்கு சென்றால் காலை முதல் மாலை வரை, அல்லது இரவில் முடிந்து விடும். ஆனால் ஒரு விஞ்ஞானி ஒரு மாதம் முதல் 10 ஆண்டுகள் என 'ரிசல்ட்' வரும் வரை ஆர்வத்தை இழக்காமல் தொடர்ந்து உழைக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் குறைந்த உழைப்பில் நிறைய சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர். விடா முயற்சி, தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்தினால் எந்த துறையிலும் சாதிக்கலாம்.
உங்களை கவர்ந்த விஞ்ஞானி
இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய், இந்தியாவில் ராக்கெட் விடவேண்டும். அதுபற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை முதலில் வலியுறுத்தியவர், 26 பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவியுள்ளார். அவர்தான் என்னை கவர்ந்த விஞ்ஞானி. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மாணவர்கள் மனதையும் கவர்ந்தவர். இக்காலத்தில் ஒரு சினிமா நடிகர், கிரிக்கெட் வீரர்களை தெரியும் அளவிற்கு விஞ்ஞானிகளை தெரிந்துகொள்வது இல்லை என்பது கசப்பான உண்மை.
உலகம் அழிந்து விடுமா
சூரிய நட்சத்திரம் பிறந்து 450 கோடி ஆண்டு ஆகிவிட்டது. அது பெரிதாகும் போது புதன், வெள்ளி, பூமியை இழுத்து விழுங்கிவிடும். இதன்படி 80 கோடி ஆண்டுகளில் பூமி அழிந்து விடும். சூரியன் போல 3000 நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன. எல்லாவற்றிற்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளன. உலகம் அழிந்துவிடும் என ஜோசியம் சொல்வதை ஏற்க முடியாது.
இயந்திர உலகமயம் நல்லதா... கெட்டதா
இது தவிர்க்க முடியாத ஒன்று. குதிரை, மாட்டுவண்டிகள் போய் 'டாக்சி' வந்தது. ஒரு கட்டத்தில் கம்ப்யூட்டர் வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். செயற்கை நுண்ணறிவு அடுத்தகட்டம். மனிதன் எப்படி சிந்திக்கிறானோ அதுபோல சொல்ல ஒரு கம்ப்யூட்டர் வந்துவிட்டது. இதில் அச்சுறுத்தல், நன்மை உள்ளது. இதனையும் பயன்படுத்தி அடுத்தகட்டத்திற்கு நாம் முன்னேற வேண்டும்.
உங்களது லட்சியம்
நாம் எங்கு இருக்கிறோம் என தெரிந்தால் தான், அடுத்து எங்கே போக வேண்டும் என தெரியும். ஆங்கிலத்தில் உள்ள அளவிற்கு தமிழில் அறிவியல் புத்தகங்கள் இல்லை. தமிழில் நிறைய புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது இலக்கு. ரயில் தண்டவாளத்தில் ஜல்லி ஏன், ராக்கெட் எப்படி பறக்குது என பத்தாவது, பிளஸ் 2 படிக்கும்போதே மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் அடிப்படை அறிவியல் தெரிந்தால் தான், பிற்காலத்தில் சாதிக்க முடியும்.
மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை
பாடபுத்தகங்களை மனப்பாடம் செய்யாமல். ஏன், எப்படி என கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் புரிதல் வரும், கிரிக்கெட், சினிமாவில் மூழ்கிவிடாமல் பாடப்புத்தகம் மட்டுமின்றி வெளியே உள்ள அறிவியல் சார்ந்த புத்தகங்கள், நாளிதழ்கள் படிக்க வேண்டும். கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும்.