நரிக்குறவர், தோடர் மொழிகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
நரிக்குறவர், தோடர் மொழிகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
ADDED : நவ 21, 2024 01:10 AM
சென்னை:தமிழகத்தில், பழங்குடியின மக்களான காணி, தோடர், நரிக்குறவர் பேசும் மொழியை ஆவணப்படுத்தும் பணியில், அரசு ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அழிந்து வரும் நிலையில் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் மொழியை ஆவணப்படுத்தும் முயற்சி துவங்கி உள்ளது. இதற்கு அரசு, 2 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதற்காக, சென்னையில் கடந்த செப்., மாதம், தேசிய அளவில் தொல்குடி மாநாட்டை நடத்தி, 'யுனெஸ்கோ' மற்றும் வெளிநாடுகளின் மொழி வல்லுனர்களுடனான ஆய்வு செய்தோம்.
அதன்படி, தற்போது அழிந்து வரும் நிலையிலுள்ள தோடர், காணி, சோளகர், கோத்தர் மற்றும் நரிக்குறவர் இன மக்களின் மொழியை தேர்வு செய்துள்ளோம்.
முதல்கட்டமாக, மாநிலம் முழுதும் வாழும் நரிக்குறவர் மக்கள் பேசும், 'வாக்கிரி பூலி' மொழியையும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள காணி இன மக்கள் பேசும், 'காணிக்காரர்' மொழியையும், நீலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் தோடர் மக்கள் பேசும், 'தோடா' மொழியையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
துறை சார்ந்த வல்லுனர்களின் உதவியுடன், ஏற்கனவே எழுதப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட பாடல்கள், ஆய்வு கட்டுரைகள், புத்தகங்களை அடிப்படையாக வைத்து, இத்துறைகளில் சிறந்த மூன்று வல்லுனர்களின் மேற்பார்வையில், ஆவணப்படுத்தும் நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறோம்.
இவர்களின் வாய்வழி இலக்கியங்களை, எழுத்து மற்றும் அகராதி வடிவிலும், பாடல்கள் அடங்கிய தொகுப்புகளாகவும் வெளியிட உள்ளோம். கடவுள் மற்றும் வலாற்று நிகழ்வுகளை, கட்டுரை, புத்தகம் என, அனைத்து வடிவிலும் வெளியிடும் முயற்சியை எடுத்து வருகிறோம்.
துறை சார்ந்த வல்லுனர்கள், மொழியியல் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் மேற்பார்வையில், 3-0க்கும் மேற்பட்டோர் உதவியுடன், இந்த மூன்று மொழிகளும் ஆவணமாகி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.