தர்மபுரி - சேலம் இடையே காவிரி மேம்பாலம் அடுத்தாண்டு பணி துவக்கம்: அமைச்சர் வேலு
தர்மபுரி - சேலம் இடையே காவிரி மேம்பாலம் அடுத்தாண்டு பணி துவக்கம்: அமைச்சர் வேலு
ADDED : அக் 16, 2025 07:44 PM
சென்னை:''தர்மபுரி - சேலத்தை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே அடுத்தாண்டு மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்படும்,'' என, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ம.க., - ஜி.கே.மணி: தர்மபுரி மாவட்டம் ஒட்டனுார், சேலம் மாவட்டம் கோட்டையூரை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும்.
மேம்பாலத்தை கட்டினால், கேரள மாநிலம் கொச்சி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை செல்லும் வாகனங்களுக்கு வசதியாக இருக்கும். தமிழகத்திற்கு பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும். இந்த மேம்பாலம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
தற்போது, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. கடலில் கூட விரைந்து பாலத்தை கட்டுகின்றனர். அதேபோல, இந்த மேம்பாலத்தையும் கட்டி தர வேண்டும்.
அமைச்சர் வேலு: இந்த நீர்த்தேக்க உயர்மட்ட பாலம் குறித்த அறிவிப்பை, அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இப்பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கு, 2 கோடி ரூபாய் ஒதுக்கினோம்.
தோராய திட்ட மதிப்பீட்டின்படி மேம்பால கட்டுமான பணிக்கு, 467 கோடி ரூபாய் தேவை. இந்தாண்டு நிதி ஒதுக்க வாய்ப்பில்லை.
ஏற்கனவே, ஒதுக்கிய பட்ஜெட் நிதிக்கு ஏற்ப பணிகள் நடந்து வருகின்றன. அடுத்தாண்டு முன்னுரிமை அடிப்படையில் இப்பணி மேற்கொள்ளப்படும்.
காங்கிரஸ் - தாரகை கத்பர்ட்: கன்னியாகுமரி மாவட்டம் விளங்கோடு வழியாக உண்ணாமலை, விரிகோடு, மார்த்தாண்டம், கருங்கல் செல்லும் சாலையில், ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் சர்வே செய்யப்பட்டது. மீண்டும் சர்வே செய்து, மக்கள் விருப்பப்படி பாலம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: போக்குவரத்து செறிவை ஆய்வு செய்து, ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. அந்த இடத்தில், ஒரு லட்சம் வாகனங்களுக்கு மேல் போக்குவரத்து இருந்தால், மேம்பாலம் கட்டப்படும்.
மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் நிதி வழங்க வேண்டும். மாநில நிதியில் முழுமையாக மேம்பாலம் கட்டுவதற்கு நிதித்துறையின் அனுமதி பெற வேண்டும்.
அ.தி.மு.க., - கந்தசாமி: கோவை மாவட்டம், 'எல் அண்ட் டி பைபாஸ்' சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை கடப்பதற்கு, மூன்று மணி நேரம் ஆகிறது. அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும்.
அமைச்சர் வேலு: எல் அண்டு டி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
திருச்சி செல்லும் அந்த சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.