ADDED : பிப் 07, 2026 05:09 AM

மந்தாரக்குப்பம்: ஊத்தங்கால் தனியார் அனல்மின் நிலையத்தில் (டாக்கா) ஒப்பந்த தொழிலாளி விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி அருகே ஊத்தங்கால் தனியார் அனல்மின் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த மணிவாசகம், 37; ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் 12:50 மணியளவில் பாய்லர் பிரிவில் பணியாற்றியபோது, நிலக்கரி சாம்பல் கட்டி அவரது தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற ஊமங்கலம் போலீசார் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனக்கு பிரேத பரிசோதைனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வலியுறுத்தி அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., மற்றும் அரசியல் கட்சியினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி டி.எஸ்.பி., ராஜேந்திரன், தாசில்தார் அரவிந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்று காலை தனியார் அனல்மின் நிலைய நிர்வாகத்தினருடன் பேசி முடிவெடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலாளியின் இறப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து, கம்பெனியின் முன் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

