ADDED : பிப் 24, 2024 12:12 AM

சென்னை:உலக வங்கியின் உயர்மட்ட குழுவினர், முதல்வர் ஸ்டாலினைசந்தித்து பேசினர்.
உலக வங்கியின் மேலாண்மை இயக்குனர் அன்னா ஜெர்டே மற்றும் உயர்மட்ட குழுவினர், நேற்று முதல்வர் ஸ்டாலினை, அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது தமிழக அரசு சார்பில், தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், பணிபுரியும் பெண்களுக்கான, குறைந்த வாடகையில் தங்கும் விடுதி திட்டமான, 'தோழி' விடுதியை பார்வையிட்டோம். சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியான திட்டம் என, அன்னா ஜெர்டே முதல்வரிடம் பாராட்டு தெரிவித்தார்.
முதல்வர் கூறியதாவது:
தமிழக வேளாண் கடன் திட்டத்திற்கு, 1971ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதில் இருந்து, தமிழகத்திற்கும், உலக வங்கிக்கும் நீண்ட கால உறவு உள்ளது.
தற்போது, உலக வங்கி நிதியுதவியுடன் எட்டு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மேலும் மூன்று திட்டங்கள் ஆலோசனையில் உள்ளன. அனைத்து திட்டங்களுக்கும், உலக வங்கி ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, முதல்வர் கூறினார். மேலும் அவர்களின் தமிழகப் பயணம் பயனுள்ளதாக அமைய, வாழ்த்துகள் தெரிவித்தார்.
சந்திப்பின்போது, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் கூடுதல் செயலர் முருகானந்தம், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.