உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகன் பவன் கல்யாண் உணர்ச்சி பேச்சு * முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் தமிழில் உணர்ச்சி பேச்சு
உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகன் பவன் கல்யாண் உணர்ச்சி பேச்சு * முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் தமிழில் உணர்ச்சி பேச்சு
UPDATED : ஜூன் 23, 2025 03:53 AM
ADDED : ஜூன் 23, 2025 03:49 AM

மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதாவது:
என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன்.
மதுரைக்கும், முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடும், கடைசி படை வீடும் இங்கு தான் உள்ளன.
முருகனின் தாயார் மதுரையில் உள்ளார். அவர் தந்தை சிவபெருமான் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கத்திற்கு தலைமையேற்றார். மதுரையில் தாயும் தந்தையும், மகனும் இருக்கின்றனர். மதுரை மக்கள் புண்ணியம் செய்தவர்கள்.
மாலிக்காபூர் படையெடுப்புக்கு பின், மதுரை இருண்டு கிடந்தது. ஆம், மீனாட்சி அம்மன் கோவில் மூடப்பட்டு கிடந்தது. பின்னர் விஜயநகர பேரரசால் ஒளி கிடைத்தது. நம் கலாசாரம் மிக ஆழமானது.
நம்மை அசைக்க யாராலும் முடியாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நம் மதம் ஆழமாக இருந்தது.இது தைரிய பூமி. முருகனின் வழியில் நம் அறம் தொடர்ந்து வளரும்.
எல்லாரையும் சமமாக பார்ப்பது அறம். தீயவர்களை வதம் செய்வது அறம். அநீதியை அழித்து மக்களை சமமாக பார்ப்பவர் புரட்சித் தலைவர். அப்படி பார்த்தால் உலகின் முதல் புரட்சித் தலைவர் முருக பெருமான். அந்த புரட்சித் தலைவனுக்காக நாம் இங்கு கூடி உள்ளோம்.
தமிழகத்தில் ஏன் மாநாடு நடத்துகிறீர்கள்
இங்கு ஒரு தலைவர், முருகனுக்கு தமிழகத்தில் ஏன் மாநாடு நடத்துகிறீர்கள் என கேட்டு பிரிவினை வாதம் செய்கிறார். நாளை சிவபெருமான், மீனாட்சியை பார்த்து கேட்கலாம்.
இந்த சிந்தனை மிக ஆபத்தானது. முஸ்லிம், கிறிஸ்துவர் என அவர்கள் மதத்தை பின்பற்றலாம். ஆனால் ஒரு ஹிந்து, அவர் மதத்தை பின்பற்றினால், மதச்சார்பு என பிரச்னை செய்கின்றனர்.
என் நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் அவமரியாதை செய்யாதீர்கள். முருகனை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதம் குறித்து கேள்வி கேட்க முடியுமா. அதற்கான துணிச்சல் உண்டா.
முருகன் எல்லா இடத்திலும் பரந்து உள்ளார். வடக்கே கார்த்திகேயனாகவும், ஆந்திராவில் சுப்பிரமணியாகவும், தமிழகத்தில் முருகனாகவும் உள்ளார். அதனால் தான் மதுரையில் அவருக்கு மாநாடு நடக்கிறது.
கந்த சஷ்டியை கிண்டல் செய்வதா
கந்த சஷ்டியை கிண்டல் செய்கின்றனர். அவர்கள் கடவுள், கலாசாரம், பண்பாட்டை கேலி செய்கின்றனர். கேட்டால், இது தான் மதச்சார்பின்மை என்கின்றனர். மற்றவர் மதத்தை கேலி செய்ய அவர்கள் யார்.
பொறுமை என்பது கோழைத்தனம் இல்லை. முருக பக்தர்கள் ஒரு பார்வை பார்த்தால் போதும். அந்த கூட்டமே காணாமல் போய் விடும். சிவபெருமான் நெற்றிக் கண்ணை திறந்த மண் இது.
அன்பால் இணைவோம். ஆவேசத்தால் வெல்வோம். முருகன் நேரில் வரமாட்டார். நம்மில் வருவார். நாமே முருகனாக மாறுவோம்.
நம் பாதையில் கொடுமையான ராட்சகர்கள் உள்ளனர். வீரவேல் வெற்றி வேல் என கூறினால் அவர்கள் ஓடிப்போய் விடுவர். ஹிந்துவாய் நாம் ஒற்றுமையாக போராட வேண்டும்.
சுண்டெலிகள் ஆயிரக்கணக்கில் படையெடுத்தாலும், ஒரு நாகப்பாம்பு சீறினால் அவை காணாமல் போகும்.
அதுபோல் சிவபெருமான் கழுத்தில் உள்ள நாகம் பார்த்தால் நாசக்காரர்கள் காணாமல் போய் விடுவர். மாற்றம் ஒன்றே மாறாதது.
தர்மத்தின் பாதையில் நின்று நாம் ஜெயிப்போம். முருகனை நம்பினால் வெற்றி, உயர்வு, எழுச்சி கிடைக்கும். வெற்றிவேல் முருகனுக்கு... அரோகரா.
இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.