ADDED : பிப் 11, 2024 12:24 AM

காஞ்சிபுரம்:தாய்லாந்து நாட்டு மன்னரின், மஹா ராஜகுரு பிரா குரு பிதி ஸ்ரீவிசுதிகன், வசிஷ்ட கோத்திரத்தை சேர்ந்தவர். தாய்லாந்து அரசவையில் திருவெம்பாவை விழா உட்பட பல்வேறு சடங்குகளை நடத்தி வருகிறார்.
இவரது முன்னோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தோர். காஞ்சிபுரம் சங்கரமடத்துடன் தொடர்பு உடையோர்.
இந்நிலையில், தாய்லாந்து மன்னரின் மஹா ராஜகுரு பிரா குரு பிதி ஸ்ரீவிசுதிகன், மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு நேற்று காலை வந்தார்.
சங்கர மடத்தின் சார்பில், அதன் மேலாளர் சுந்தரேச அய்யர் மற்றும்மடத்தின் நிர்வாகிகள்,தாய்லாந்து நாட்டு மன்னரின் ராஜகுருவை வரவேற்றனர்.
மடத்தில் நடந்த சிறப்பு பூஜையில் ராஜகுரு பங்கேற்றார். பின், பூஜிக்கப்பட்ட பிரசாதம், சங்கரமடத்தின் மடாதிபதி, சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் படத்தை, சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், தாய்லாந்து ராஜகுருவிடம் வழங்கினார்.
அதை தொடர்ந்து, சங்கரமடத்தில் உள்ள மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள், சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில், அவர்கள் வழிபாடு செய்தனர்.
முன்னதாக, தாய்லாந்து ராஜகுரு, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். சங்கர மடத்திலிருந்து, புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.