ADDED : மார் 01, 2024 09:39 PM

சென்னை:எழுத்தாளர் அஸ்வ கோஷ் என்ற, ராஜேந்திர சோழன், 79; நேற்று காலமானார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையை சேர்ந்தவர் ராஜேந்திர சோழன். ஆசிரியராக பணியாற்றிய இவர், துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்டவற்றில் செயல்பட்டார்.
பல்வேறு இதழ்களில் கதைகள் எழுதினார். அரசுப்பணிக்கு எழுத்துப்பணி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, அஸ்வகோஷ் என்ற புனை பெயரில் எழுதினார். துவக்கத்தில் மார்க்சிஸ்ட் சிந்தனையுடனும் பின், அதற்கு எதிராகவும் படைப்புகளை எழுதினார்.
அவரின், 'கோணல் வடிவங்கள், புற்றிலுறையும் பாம்புகள், எட்டு கதைகள்' உள்ளிட்ட படைப்புகள் இலக்கியவாதிகளால் பாராட்டப்பட்டன.
டில்லி நாடக பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர், நாடக குழு நடத்தினார். 'பிரச்னை, உதயம், மண்மொழி' ஆகிய இதழ்களையும் நடத்தினார்; அவர் நேற்று காலமானார்.
அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. அவர் உடலுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ராஜேந்திர சோழனுக்கு ராஜகுமாரி என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் ஆர்.பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

