வாலிபரால் சிறுமி கர்ப்பம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், 24, என்பவருடன் சில மாதங்கள் முன் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் அந்த வாலிபர் ஈடுபட்டார். சமீபத்தில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து சிலம்பரசனை கைது செய்தனர்.
மாணவரால் மாணவி கர்ப்பம்
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில், 15 வயது சிறுமி படித்து வந்தார். சிறுமியிடம் பிளஸ் 2 படித்து வரும், 17 வயது மாணவர் பழகி வந்தார். மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி கர்ப்பமானார். பெற்றோர் கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் அளித்த புகாரை தொடர்ந்து சிறுவன் கைது செய்யப்பட்டார்.
ஆய்வக உதவியாளர் கைது
சேலம்: சேலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் குமரேசன், 57, என்பவர், அறிவியல் ஆய்வக உதவியாளராக பணிபுரிகிறார். இவர், சில நாட்களுக்கு முன் பள்ளி ஆய்வகத்துக்கு வந்த மாணவியரிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் இளங்கோ அளித்த தகவலின்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், பள்ளியில் விசாரித்தனர். அதில், குமரேசன், மாணவியரிடம் சில்மிஷம் செய்தது உறுதியானது.
இதையடுத்து இளங்கோ புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து, நேற்று முன்தினம் குமரேசனை கைது செய்தனர். இதுதொடர்பாக கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால், துறை நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலாளி சிக்கினார்
மேட்டூர்: மேட்டூர் அருகே உள்ள, 17 வயது மாணவியை, உறவினர் தொழிலாளியான செல்வராஜ், 35, கடந்த டிசம்பரில், மேட்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்படி, மேட்டூர் மகளிர் போலீசார் விசாரித்து, செல்வராஜை நேற்று கைது செய்தனர்.
ஓவிய ஆசிரியர் கைது
கோவை: கோவை, ரெட்பீல்ட்ஸ் பகுதியில் விமானப்படை பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில் வடவள்ளி கோல்டன் நகரைச் சேர்ந்த ராஜன், 56, என்பவர், ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் தன்னிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக, ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.
பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். முதல்வர் மாணவியிடம் விசாரணை நடத்திய பின், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து, அந்த ஆசிரியரை நேற்று கைது செய்தனர்.
மகளுக்கு தந்தை தொல்லை
ஈரோடு: ஈரோடு, ஆர்.என்.புதுார் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி, மனைவி, மகளுடன் வசிக்கும் பெயின்டர், தன், 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதையறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, தந்தையை கைது செய்தனர்.
மளிகை கடைக்காரர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன், 38, என்பவரின் மளிகைக்கடை அருகே, வாடகை வீட்டில், தன் பெற்றோருடன் வசிக்கும் 15 வயது மகள், மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, மணிகண்டன் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அவரின் தொல்லை அதிகரிக்கவே, தன் பெற்றோரிடம் அந்த சிறுமி கூறினார். திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார், மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.
முதியவருக்கு '20 ஆண்டு'
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை, வி. கழுகாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த மணி, 61, என்பவர் 2022ல் அப்பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். விசாரணை துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சுரேஷ் குற்றம்சாட்டப்பட்ட முதியவர் மணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

