sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நேற்றைய போராட்டம்: 'டாஸ்மாக்' பணியாளர்கள் பேரணி; சத்துணவு ஊழியர்கள் தர்ணா

/

 நேற்றைய போராட்டம்: 'டாஸ்மாக்' பணியாளர்கள் பேரணி; சத்துணவு ஊழியர்கள் தர்ணா

 நேற்றைய போராட்டம்: 'டாஸ்மாக்' பணியாளர்கள் பேரணி; சத்துணவு ஊழியர்கள் தர்ணா

 நேற்றைய போராட்டம்: 'டாஸ்மாக்' பணியாளர்கள் பேரணி; சத்துணவு ஊழியர்கள் தர்ணா

5


ADDED : பிப் 12, 2026 12:32 AM

Google News

5

ADDED : பிப் 12, 2026 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பணி நிரந்தரம் கோரி, கோட்டை நோக்கி பேரணியாக சென்ற, 'டாஸ்மாக்' பணியாளர்களை, போலீசார் கைது செய்தனர்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டாஸ்மாக்' தொழிற்சங்கங்கள் சார்பில், சென்னையில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து, 11வது நாளாக நேற்று, பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலையில், குறளகம் அருகே, 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள், கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

அவர்களை போலீசார் கைது செய்து, 10க்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற்றி, தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.

அ.தி.மு.க., ஆதரவு


டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக, அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில், சென்னையில் நேற்று பேரணி நடந்தது. சிந்தாதிரிப்பேட்டையில் துவங்கிய பேரணி, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

பேரணி முடிவில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:

டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக சொல்லிவிட்டு, தங்களை சார்ந்தவர்களுக்காக, மனமகிழ் மன்றம் என்ற பெயரில், ஊருக்கு 10 மதுபான கிளப்புகளை திறந்து விட்டனர். மாதம் 5,000 கோடி ரூபாய் வருமானம், டாஸ்மாக் வழியாகத்தான் வருகிறது. ஆனாலும், அந்த ஊழியர்களின் கோரிக்கையை, அரசு நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மாற்றுத்திறனாளிகள்


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று முன்தினம் முதல், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் நாளான நேற்று, சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் நடந்த போராட்டத்திற்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வில்சன் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் பங்கேற்ற, நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

வேலுாரில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் மாற்று திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்தடுத்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின், போக்குவரத்தை சீர் செய்தனர்.

சத்துணவு ஊழியர்கள்


தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

ஒன்பதாம் நாளான நேற்று, சென்னை, தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் அருகே, 1,200 ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கவுரவ விரிவுரையாளர்கள்


தமிழ்நாடு அரசு கல்லுாரி, கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் காலவரையற்ற போராட்டம் நடந்து வருகிறது.

யு.ஜி.சி., உத்தரவின்படி, 57,000 ரூபாய் வழங்க வேண்டும்; 12 மாத கால ஊதியம் வழங்க வேண்டும்; தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்றாவது நாளாக, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லுாரி, கவுரவ விரிவுரையாளர்கள், வகுப்புகளை புறக்கணித்து, கல்லுாரிக்கு வெளியே, நடைபாதையில் அமர்ந்து போராடி வருகின்றனர்.

ஊராட்சி செயலர்கள்


தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், தங்களையும் இணைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி செயலர்கள் நேற்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, சைதாப்பேட்டையில், பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார்.

போராட்டத்தில், 2,500க்கும் அதிகமானோர் பங்கேற்று, நுாதன முறையில், கையில் திருவோடு ஏந்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மாலையில் விடுவித்தனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள்


ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி, சுற்றுலா கேப் ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர், ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us