யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை; 51 தண்டால் எடுத்து அசத்திய கவர்னர் ரவி!
யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை; 51 தண்டால் எடுத்து அசத்திய கவர்னர் ரவி!
UPDATED : ஜூன் 21, 2025 01:15 PM
ADDED : ஜூன் 21, 2025 01:12 PM

மதுரை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட கவர்னர் ரவி, 51 தண்டால் எடுத்து பார்வையாளர்களை அசத்தினார். கவர்னருக்கு வயது 73.
சர்வதேச யோகா தினம் முன்னிட்டு, மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி யோகா கற்றுக் கொடுத்தார். அப்போது கவர்னர் ரவி பேசியதாவது: யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை. உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை வழங்கும் சக்திவாய்ந்த ஆதாரம். இளையோர்கள், தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக யோகாவை கருத வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முருகக் கடவுள் தான்!
இதற்கிடையே, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சியை கவர்னர் ரவி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், கவர்னர் ரவி கூறியதாவது:
ஒரே இடத்தில் அறுபடை முருகனை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆறு அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை முன்னெடுத்துள்ள இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள்.
முருகன் நம் கலாசாரத்திற்கான கடவுள். இது நமது கலாசார அடையாளம். இது தான் நமது பாரதம். முருகனின் அறுபடை வீடுகளையும், ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டும் என்பது நமது கனவு. ஒருநாள் இது பலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
யோகா செய்த அண்ணாமலை!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அவரது இல்லத்தில், யோகா பயிற்சி மேற்கொண்டார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: யோகா பயிற்சிகள், உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நல்வாழ்வை மேம்படுத்துவதை , உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன.
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில், மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். யோகா பயிற்சி செய்வது வழக்கமான உடற்பயிற்சியைத் தாண்டி, உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, சுவாசத்தை சீரமைப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது என, அன்றாட வாழ்வை மேம்படுத்துகிறது. அனைவரும் யோகாசனம் செய்வோம். நமது உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.