முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்
ADDED : டிச 04, 2025 05:48 AM

சென்னை: ''முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்காவிட்டால், 104 என்ற மருத்துவ சேவையில் புகார் தெரிவிக்கலாம்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான, அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ., கருவி; 35.95 லட்சம் ரூபாய் மதிப்புடைய, தானியங்கும் புற ரத்தக்குழாய் நோயறிதல் கருவி ஆகியவற்றை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், சக்கர நாற்காலிகள் வழங்கினார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி:
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக, தொடர் புகார்கள் வருகின்றன. தனியார் மருத்துவமனைகளுடன் வாரந்தோறும் திங்கள் கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து, 104 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளித்தால், அம்மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

