சொன்னது புரிந்தால்தானே பதில் அளிக்க முடியும்; முதல்வர் குறித்து ராமதாஸ் கிண்டல்
சொன்னது புரிந்தால்தானே பதில் அளிக்க முடியும்; முதல்வர் குறித்து ராமதாஸ் கிண்டல்
ADDED : டிச 21, 2024 09:03 PM

திருவண்ணாமலை: 'முதல்வருக்கு அன்புமணி சொன்னது புரிந்தால்தானே பதில் அளிக்க முடியும். புரியாமல் எப்படி பதில் அளிப்பார்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கிண்டலாக கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த தமிழக உழவர் பேரியக்கம் சார்பில் நடந்த மாநில மாநாட்டில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: உழவர்களை பார்க்க முடியாத அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கக் கூடாது. விவசாயிகளை படுகுழியில் தள்ளுகின்ற திராவிட மாடல் அரசை மக்கள் தூக்கி எறிய உள்ளார்கள். உழவர்கள் தான் உலகிற்கு உணவு கொடுக்கும் கடவுள் என்பது தான் எங்கள் கொள்கை, அடிப்படையில் நான் யார் என்று கேட்டால், உழவன் என்று தான் கூறுவேன்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். விவசாய தொழிலை லாபகரமானதாக மாற்ற வேண்டும்.
தற்கொலை
இந்தியாவில் அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகளிலும் கடன் கிடைக்காததால், தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் விவசாயிகள், அதனை திருப்பி செலுத்த முடியாமல், கடன் வலையில் சிக்கி கொண்டு, மீண்டு வர முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களை அழிப்பதை ஏற்க முடியாது.
விவசாயிகளின் ஒப்பற்ற தலைவன் என்றால் அது சவுத்ரி சரன் சிங் தான். மத்திய அரசில் பல பதவிகளை வகித்த போதும், விவசாயிகளை அவர் மறந்ததில்லை. நீர் மேலாண்மை விருது பெற்ற ராஜேந்திர சிங்கைப் போல தமிழகத்தில் நீர்வளத்தை பாதுகாக்க மரங்களை நடுதல், ஏரிகளை தூர்வாருதல், தடுப்பணைகளை கட்டுதல் உள்ளிட்டவற்றை பசுமை தாயகம் மூலம் மேற்கொண்டு வருகின்றேன்.
ராஜஸ்தானை விட தமிழகத்தில் 6 மடங்கு மழை அதிகம். ஆனால், ராஜஸ்தானில் குடிநீர் பஞ்சம் இல்லை. தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் இருக்கிறது. இதற்கு காரணம், நீர் மேலாண்மையில் தமிழகம் கீழ் நிலையில் இருப்பதுதான். தமிழகத்தில் ஏற்படும் வறட்சி மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கையானது தான்.
போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் போர் நினைவு சின்னம் இருக்கும் இடத்தில் விவசாயிகளுக்கான போராட்டம் நடைபெறும். போராட்ட தேதி 2025ல் அறிவிப்பேன், எனக் கூறினார்.
கிண்டல்
முன்னதாக பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி, 'தென்பெண்ணையில் வெள்ளம் வரக் காரணமே தி.மு.க., அரசு தான்', எனக் கூறினார். அப்போது, அவரது பேச்சை இடைமறித்து பேசிய ராமதாஸ், 'முதல்வருக்கு அன்புமணி சொன்னது புரிந்தால்தானே பதில் அளிக்க முடியும். புரியாமல் எப்படி பதில் அளிப்பார்', என்று சிரித்தபடியே கூறினார்.
தொடர்ந்து அன்புமணி பேசியதாவது: எந்த அறிவிப்பும் இல்லாமல் சாத்தனூர் அணையை திறந்து விட்டார்கள். 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திடீரென திறந்ததால் தான் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தி.மு.க., அரசு முதலாளிகள் பக்கம்
ராமதாஸைப் போல விவசாயிகளுக்கு நல்லது செய்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுகிறேன். விளைநிலங்களை அழித்து அறிவுசார் நகர் அமைக்க வேண்டுமா? வேளாண் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இலவசங்கள் தேவையில்லை. பரந்துாரில் விவசாய நிலத்தில் விமான நிலையம் கொண்டு வரக்கூடாது. திருப்போரூரில் தான் அமைய வேண்டும். பா.ம.க., மட்டும் தான் விவசாயிகளின் பக்கம் நிற்கிறது. தி.மு.க., அரசு முதலாளிகள் பக்கம் தான் உள்ளது, எனக் கூறினார்.