ADDED : ஜன 18, 2025 06:54 AM
மந்தாரக்குப்பம் : முந்திரி காட்டில் வாலிபரை எரித்து கொலை செய்த வழக்கில், ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த வீரட்டிக்குப்பம் முந்திரி காட்டில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் மற்றும் ஊமங்கலம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அதில், இறந்தவர் வீரட்டிகுப்பம் தெற்கு தெருவை சேர்ந்த கதிர்காமன் என்பதும், அவரும் அதேகிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பாலகிருஷ்ணன்,43; அவரது தம்பி ஆறுமுகம் ஆகிய மூவரும் கடந்த 15ம் தேதி இரவு முந்திரி காட்டில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மற்ற இருவரும் கதிர்காமனை மது பாட்டிலால் தாக்கி கொலை செய்து உடலை எரித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
அதன்பேரில் ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து ராணுவ வீரர் பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை தேடிவருகின்றனர்.