UPDATED : அக் 03, 2026 01:13 AM
ADDED : அக் 03, 2026 01:09 AM

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே, பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சூர்யா, 22, என்பவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே, கீழேசித்தகுடிபட்டியை சேர்ந்த பிரேம்குமார், 50, என்பவருக்கு சொந்தமாக அதே பகுதியில் சிறிய அளவிலான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு தினமும், பத்துக்கு மேற்பட்டோர் பணி செய்தனர்.
நேற்று, வீரக்குடியைச் சேர்ந்த சூர்யா என்பவர் மட்டும் பணி செய்தார். அப்போது, திடீரென பட்டாசு ஆலை வெடித்து சிதறி தரைமட்டமானது. சத்தம் கேட்டு அங்கு ஓடிச்சென்று பார்த்த போது, சூர்யாவின் உடல் பலத்த தீக்காயத்துடன் வெடித்துச் சிதறி கிடந்தது.
சம்பவம் குறித்து, தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் சக்திவேல், இலுப்பூர் டி.எஸ்.பி., திவ்யா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதன்பின், சூர்யாவின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
