UPDATED : டிச 17, 2024 03:45 PM
ADDED : டிச 17, 2024 03:31 PM

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட சிலர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலை மாதம் நிபந்தனை ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகவில்லை. இது குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
இந்நிலையில், சென்னையில் போலீசார் அவரை கைது செய்து தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்றனர்.