ஒய்.எஸ்.எஸ்., - எஸ்.ஆர்.எப்., தலைவர் சுவாமி சிதானந்தகிரி சென்னை வருகை
ஒய்.எஸ்.எஸ்., - எஸ்.ஆர்.எப்., தலைவர் சுவாமி சிதானந்தகிரி சென்னை வருகை
ADDED : ஜன 20, 2025 05:44 AM

சென்னை : ஒய்.எஸ்.எஸ்., எனப்படும், யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா, எஸ்.ஆர்.எப்., எனப்படும், 'செல்ப் ரியலைசேஷன் பெலோஷிப்' தலைவரும், ஆன்மிக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்தகிரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், இந்தியா மற்றும் நேபாளத்திற்கு வருகிறார்.
இந்தியா வருகையின் போது, பிப்., 2ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரு, பிப்., 9ல் சென்னை, பிப்., 23ல் குஜராத் ஆமதாபாத், பிப்., 27ல், உ.பி., நொய்டாவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். மார்ச் 1ல் நேபாளம் காத்மாண்டு செல்கிறார்.
நிகழ்ச்சிகள்
ஒரு நாள் நிகழ்ச்சியில் சுவாமிஜியின் சத்சங்கம், மூன்று மணி நேர கூட்டு தியானம், பிரபஞ்ச கீதங்கள், கீர்த்தனை அமர்வு இடம் பெறும்.
யோகாவின் உலகளாவிய போதனைகளை, இந்தியா மற்றும் உலகம் முழுதும் உள்ள உண்மையை தேடுபவர்களுக்கு பரப்புவதற்காக, 100 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், ஆன்மிக அமைப்புகளான யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா, செல்ப் ரியலைசேஷன் பெலோஷிப்பை நிறுவினார்.
அவற்றின் தலைவர் மற்றும் ஆன்மிக முதல்வர் தான் சுவாமி சிதானந்தகிரி. இவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒய்.எஸ்.எஸ்., - எஸ்.ஆர்.எப்.,பில் சன்னியாசியாக இருந்து வருகிறார்.
மேலும், 2009 முதல் இயக்குனர்கள் குழுவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
ஆன்மிக அறிவியல்
அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் விரிவுரைகள், பயிற்சி பயணங்கள், ஏகாந்தவாச நிகழ்ச்சிகளிலும், லாஸ் ஏஞ்சலஸில் வருடாந்திர உலக சமய கூட்ட விழாக்களிலும், யோகானந்தரின் போதனைகளை சுவாமிஜி பகிர்ந்து வருகிறார்.
பரமஹம்ஸ யோகானந்தர், 1917ல் ஒய்.எஸ்.எஸ்.,ஐ நிறுவினார். இந்தியாவிலும், அண்டை நாடுகளிலும், கிரியா யோகாவின் உலகளாவிய போதனைகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய ஒரு புனிதமான ஆன்மிக அறிவியலாகும்.
இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளுக்கு வெளியே, யோகானந்தரின் போதனைகள், 1920ல் அவர் மேற்கு நாடுகளுக்கு சென்றபோது நிறுவிய எஸ்.ஆர்.எப்., அமைப்பால் உலகம் முழுதும் பரப்பப்படுகின்றன.