ஜீரோ பேலன்ஸ்: நவீன காலத்துக்கான புதிய சூத்திரம் என்ன தெரியுமா?
ஜீரோ பேலன்ஸ்: நவீன காலத்துக்கான புதிய சூத்திரம் என்ன தெரியுமா?
ADDED : அக் 06, 2025 12:36 AM

ஒரு காலத்தில், இந்தியாவில் தங்கமும், நிலமும் தான் முக்கியமான சேமிப்பு. அந்த பாரம்பரியம் இப்போதும் தொடர்கிறது. இந்திய குடும்பங்களில், 28,600 டன் தங்க இருப்பு உள்ளது.
இப்போது, உலக அளவில் நான்காவது பெரிய பொருளாதார நாடு இந்தியா. ஆனாலும், உள்ளே ஒரு பிரச்னை கனன்று கொண் டிருக்கிறது.
இடைவெளி இந்தியாவின் 77 சதவீத செல்வத்தை, ஒரு சதவீத இந்தியர்கள் கட்டுப்படுத்துகின்றனர். கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதம் பேர், அதாவது 70 கோடி பேரிடம், நாட்டின் செல்வத்தில் 6.40 சதவீதம் மட்டுமே இருக்கிறது. அதாவது தலைக்கு 1.72 லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றுள்ளனர்.
இந்தியர்களில் பாதி பேர், தாங்கள் போதிய அளவு சேமிக்கவில்லை என்று கருதுகின்றனர். ஏதேனும் அவசர செலவு வந்துவிட்டால், அதைச் சமாளிக்க முடியாது என்று இருவரில் ஒருவர் நினைக்கிறார். நம் பாரம்பரிய சேமிப்பு கலாசாரம் சரிந்துபோனதே இதற்கு காரணம்.
சேமிப்பில்லை கடந்த 1997 - 2021ல் பிறந்த ஜென் ஜி மற்றும் 1981 - 1996ல் பிறந்த மில்லேனியல்ஸ் ஆகிய தலைமுறையினரின் சேமிக்கும் பழக்கம், அவர்களது பெற்றோர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. முந்தைய தலைமுறையினர் தமது சேமிப்பில் 47 சதவீதத்தை வங்கிகளில் வைத்திருக்க, புதிய தலைமுறையினரோ, இத்தகைய சேமிப்புகளில் ஈடுபடுவது மிக மிகக் குறைவு.
இவர்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டுகள் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இங்கேயும் சிக்கல். உண்மையில், 5 - 6 சதவீத இந்தியர்கள் தான் பங்குகளில் முதலீடு செய்கின்றனர்.
'இன்று வாங்கி, பின்னர் பணம் கட்டும்' இன்றைய டிஜிட்டல் கடன் யுகத்தில், இளைஞர்கள், தேவைகளுக்காக கடன் வாங்குவதை விட ஆடம்பரப் பொருட்களுக்காகவே கடன் வாங்குகின்றனர்.
ஓய்வு கணக்கு ஓய்வுக்காலம் அமைதியாக இருக்க வேண்டுமானால், உங்களின் தற்போதைய ஆண்டு வருவாயைப் போல், 25 மடங்கு சேமிப்பு இருக்க வேண்டும்.
ஒருவர் ஓராண்டில் 5 லட்சம் ரூபாய் ஈட்டினால், ஓய்வு காலத்துக்கு அவரிடம் 1.25 கோடி ரூபாய் சேமிப்பு இருக்க வேண்டும். இவ்வளவு துாரம் சேமிக்க முடியுமா?
சேமிப்புக்கான பழைய சூத்திரத்தின்படி, வருவாயில் 50 சதவீதத்தை அடிப்படைத் தேவைகளுக்கும், 30 சதவீதத்தை விருப்ப செலவுகளுக்கும் 20 சதவீதத்தைச் சேமிப்புக்கும் பயன்படுத்த வேண்டும்.
பல இளைய, மத்திய வயது இந்தியர்களால், தங்கள் வருவாயில் 10 சதவீதத்தைக் கூட சேமிக்க முடியவில்லை. இதற்கு, தேவையற்ற செலவுகளும், பணவீக்கமுமே காரணம்.
கடன் வலை பர்சனல் லோன், கிரெடிட் கார்டு, தங்க அடமானம் ஆகிய பாதுகாப்பில்லாத கடன்கள், ஒவ்வோர் ஆண்டும் 25 சதவீத அளவுக்கு உயர்ந்து வருகின்றன.
இப்போது, நம் குடும்ப கடனில் இவை மட்டும் 55 சதவீதத்தை எட்டியுள்ளன. நீண்டகால பாதுகாப்பு என்பதை மறந்து எல்லோரும் உடனடி மகிழ்ச்சியில் திளைக்கும் அபாயகரமான திசையில் நகர்கின்றனர்.
ஏ.ஐ., அச்சுறுத்தல் வரும் 2030க்குள், அமெரிக்காவில் 30 சதவீத வேலைகளை செயற்கை நுண்ணறிவு பறித்துவிடப் போகிறது. இந்த மாற்றத்தால், இந்தியாவுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்காது.
இந்த பின்னணியில், வருவாயில் 20 சதவீதத்தைச் சேமித்தால் போதும் என்ற பழைய ஆலோசனை இனி உதவாது. இளைஞர்கள், தங்களுடைய தேவையற்ற செலவுகளைக் கடுமையாக குறைத்துக்கொண்டு, 40 சதவீத அளவுக்குச் சேமிக்க வேண்டும்.
பழைய சூத்திரம் வருவாய் -- செலவினங்கள் = சேமிப்பு
புதிய சூத்திரம் வருவாய் -- சேமிப்பு = செலவினங்கள்
முதலில் சேமியுங்கள். பின்னர் மிச்சம் மீதியிருப்பதை செலவு செய்யுங்கள்.
முக்கியமான கேள்வி இனிமேல் உங்களால் சேமிக்க முடியுமா என்பது முக்கியமில்லை. சேமிக்காமல் வாழ்ந்துவிட முடியுமா என்பது தான் அவசியமான கேள்வி.
இப்போது உங்கள் முன் உள்ள ஒரே கேள்வி இதுதான், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க போதுமான அளவு சேமிக்கிறீர்களா?