ADDED : மே 02, 2013 09:13 PM

நியூயார்க்: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான, டேவில் ரோஸ்மேரின், இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனை நடத்தினார்.
கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த, எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மன அழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில், கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மன அழுத்தம் நோயின் தாக்கம், எந்தவகையிலும் குறையவில்லை.
ரோஸ் மேரின் குறிப்பிடுகையில், ''கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்னையிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான், இந்த ஆய்வின் முக்கிய அம்சம். இந்த ஆய்வு, இனி வரும் மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.
