ADDED : செப் 21, 2011 03:46 AM

ரோம்: கிரீஸ் தனது மூன்றாவது தவணை பெறுவது குறித்து, நேற்று இரண்டாவது நாளாக, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மூன்று அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
'தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளோம். ஆனால், 'யூரோ' மண்டலத்தின் பலிகடாவாக நாங்கள் ஆக முடியாது' என கிரீஸ் நிதியமைச்சர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
'யூரோ' கரன்சி பயன்படுத்தும் 17 நாடுகளில், கிரீஸ் தற்போது பெரும் கடன் சுமையில் மூழ்கியுள்ளது. கடந்த மே மாதம், 110 பில்லியன் யூரோ (ஒரு பில்லியன் - 100 கோடி; ஒரு யூரோ - ரூ.65) முதல் தவணை, ஐரோப்பிய யூனியன் (இ.யு.,), சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.,) ஆகிய மூன்று அமைப்புகளால் அந்நாட்டிற்கு வழங்கப்பட்டது.மூன்றாவது தவணை:அதையடுத்து நடந்த கூட்டத்தில், மேலும் 109 பில்லியன் யூரோ வழங்க உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த மூன்றாவது கூட்டத்தில், 8 பில்லியன் யூரோ மூன்றாவது தவணையாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிக்கு, கைமாறாக, ஐ.எம்.எப்., உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் நிர்ணயித்திருந்த பொருளாதார சீர்திருத்தங்களை தேவையான வேகத்தில் கிரீஸ் மேற்கொள்ளவில்லை எனப் புகார் எழுந்தது.இதையடுத்து, கடந்த வார இறுதியில் போலந்து நாட்டின் வ்ரோக்ளா நகரில் நடந்த கூட்டத்தில், மூன்றாவது தவணையை அக்டோபர் மாத முடிவில் பேசி அளிக்கலாம் என, முடிவு செய்யப்பட்டது.
பணம் இல்லை:அதேநேரம், அக்டோபர் 15ம் தேதி வரை தான் தனது கையில் பணம் இருப்பதாகவும், மூன்றாவது தவணை உடனடியாக அளிக்கப்படாவிட்டால், அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்க முடியாது எனவும் கிரீஸ் தெரிவித்தது.இதையடுத்து, கிரீஸ் திவாலாகப் போவதாக செய்திகள் பரவின. கடந்த வார நடுவில் துவங்கி நேற்று வரை ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இதன் காரணமாக சரிவு காணப்பட்டது. இத்தாலியின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை 'எஸ் அண்டு பி' குறைத்ததும், சரிவுக்கு முக்கிய காரணமானது.பலிகடாவா கிரீஸ்?இந்நிலையில், நேற்று முன்தினம் ஐ.எம்.எப்., உள்ளிட்ட மூன்று அமைப்புகளுடனும், கிரீஸ் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசுலோஸ் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் முடிவு எதுவும் காணப்படாததால் நேற்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டியில்,'யூரோ மண்டல கடன் பிரச்னையை எதிர்கொள்ள வழி தெரியாததால், மூன்று அமைப்புகளும், கிரீசை பலிகடாவாக்கப் பார்க்கின்றன. இது தொடர்பாக கிரீஸ் மிரட்டப்பட்டு வருகிறது' என்று காட்டமாகத் தெரிவித்தார்.15 நிபந்தனைகள்:மூன்றாவது தவணை வேண்டுமானால், 15 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என, ஐ.எம்.எப்., உள்ளிட்ட மூன்று அமைப்புகள், கிரீஸ் பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முழுப்பக்க அளவில் விளம்பரம் அளித்திருந்தன.
அவற்றில், அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோரில் ஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்புதல், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை வெட்டுதல் அல்லது குறைத்தல், நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை மூடல், நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டச் செலவுகளைக் குறைத்தல், தனியார் மயமாக்கலை விரைந்து நடைமுறைப்படுத்தல் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.தொடர் ஆர்ப்பாட்டங்கள்:இதற்கிடையில் நேற்று முன்தினம், கிரீஸ் அரசு புதிய சொத்து வரியை அறிவித்தது. இந்த வரியை, மின்சார வாரியங்கள் மூலம் மக்கள் செலுத்தலாம் எனவும் கூறியது. ஆனால், ஏற்கனவே சம்பளக் குறைப்பு உள்ளிட்டவைகளால் அவதிப்பட்டு வரும் மின்சார வாரிய ஊழியர்கள் இந்த வரியை வசூலிக்க முடியாது எனக் கூறி விட்டனர்.அதோடு, பல அரசு ஊழியர் சங்கங்கள், பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.