ADDED : செப் 11, 2011 11:28 PM

காத்மாண்டு : நேபாள மாவோயிஸ்ட் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசண்டா, இரு நாட்களாக காணாமல் போனதாக உலா வந்த பல்வேறு ஊகங்களுக்கு, அவரே முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள விராட்நகர் விமான நிலையத்தில் கடந்த 9ம் தேதி பிரசண்டா, தனது மனைவி சீதா மற்றும் மகன் பிரகாஷ் ஆகியோருடன் விமானம் ஒன்றில் ஏறிச் சென்றார்.இதையடுத்து 9, 10 தேதிகளில் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் வசித்து வரும் தனது மகள் கங்காவுக்கும், மருமகன் நாராயண் விக்ரமுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையைத் தீர்ப்பதற்காக அங்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.நேபாளத்தின் தற்போதைய அரசியல் நிலை பற்றி இந்தியாவின் 'ரா' பிரிவு அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை செய்வதற்காக, சிலிகுரி சென்றதாகவும் சொல்லப்பட்டது. அவர் ஓய்வு எடுப்பதற்காக ஒரு மலைத் தலத்திற்குச் சென்றதாகவும் செய்திகள் வெளியாயின. இவ்வாறு பல்வேறு ஊகங்கள், நாடு முழுவதும் பத்திரிகைகள் மூலம் உலா வந்தன.இந்நிலையில், நேற்று முன்தினம் பிரசண்டா மீண்டும், அதே விராட் நகர் விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது பேட்டியளித்த அவர் கூறியதாவது:பிரதமர் பாபுராம் பட்டாராய், பாதுகாப்பு அதிகாரிகள், கட்சி மூத்த தலைவர்கள் ஆகியோருக்கு நான் எங்கு சென்றேன் என்பது தெரியும்.நான் நேபாளத்தில் தான் இருந்தேன். அது ரகசிய பயணம் அல்ல. குடும்ப விஷயமாகத் தான் சென்றேன். நான் சென்ற காரியம் வெற்றிகரமாக முடிந்தது.இவ்வாறு தன்னைப் பற்றி உலா வந்த பல்வேறு ஊகங்களுக்கு, பிரசண்டாவே முற்றுப் புள்ளி வைத்தார்.