இந்தியாவில் இருந்து கொண்டு ஹசீனா வாய் திறக்க கூடாது : முகமது யூனுஸ் ‛அட்வைஸ் '
இந்தியாவில் இருந்து கொண்டு ஹசீனா வாய் திறக்க கூடாது : முகமது யூனுஸ் ‛அட்வைஸ் '
UPDATED : செப் 05, 2024 08:30 PM
ADDED : செப் 05, 2024 08:21 PM

டாக்கா: இந்தியாவில் இருந்து கொண்டு கருத்து தெரிவிக்க கூடாது , என வங்கதேச இடைக்கால அரசு நிர்வாகி முகமது யூனுஸ் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி தற்காலிகமாக இந்தியாவில் தங்கி அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.
அவர் மீது வங்கதேச இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்து அனைத்து தூதரக பாஸ்போர்ட்டும் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் இடைக்கால அரசின் தலைமை நிர்வாகி முகமது யூனுஸ் இன்று (செப்.,5) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா இந்தியாவில் இருந்து கொண்டு கருத்து தெரிவிப்பது சரியானதல்ல. இது பிரச்சனையாக இருக்கிறது.
ஹசீனாவை இந்தியா தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வைத்திருக்க விரும்பினால், வைத்து கொள்ளட்டும். ஆனால் அவர் அமைதியாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாய் திறக்க கூடாது. இவ்வாறு முகமது யூனுஸ் கூறினார்.