ADDED : ஆக 06, 2024 01:28 AM

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான பேகம் கலீதா ஜியா, 78, மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டுஇருந்தது.
இந்த வழக்கில் அவருக்கு, 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, 2018ல் உத்தரவிடப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய, வங்கதேச அதிபர் முகமது ஷகாபுதீன் நேற்று உத்தரவிட்டார்.
அதிபர் மாளிகையில் நேற்று நடந்த கூட்டத்தில், ராணுவ தளபதி வகார் உஜ் ஜமான், விமானப்படை, கடற்படை தளபதிகள் மற்றும் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத் - இ - இஸ்லாமி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பின், கலீதா ஜியாவை விடுவிக்கும் உத்தரவை அதிபர் பிறப்பித்துள்ளார்.
மாணவர்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக இடைக்கால அரசு அமைக்கவும், இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.