அமெரிக்காவில் 1,600 பேர் வேலை பறிப்பு; வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுமுறை
அமெரிக்காவில் 1,600 பேர் வேலை பறிப்பு; வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுமுறை
ADDED : பிப் 25, 2025 12:55 AM
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் வெளிநாட்டு நிதியுதவிகளை நிர்வகிக்கும் யு.எஸ்.ஏ.ஐ.டி., அமைப்பின் சார்பில் வெளிநாடுகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, வாஷிங்டனில் பணியாற்றும், 1,600 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ., எனும் துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறையின் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார்.
இந்த இலாகா, அமெரிக்காவின் யு.எஸ்.ஏ.ஐ.டி., அமைப்பின் கீழ் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவிகளை முழுமையாக நிறுத்தி உத்தரவிட்டது.
இதைத் தவிர, வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் நாடு திரும்பும்படி உத்தரவிடப்பட்டது. வாஷிங்டனில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றும் பலருக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த முடிவுகளை எதிர்த்து, ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
சமீபத்தில் இதை விசாரித்த நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அதே நேரத்தில் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறியது.
இந்நிலையில் நேற்று முன்தினம், அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி, வெளிநாடுகளில் உள்ள யு.எஸ்.ஏ.ஐ.டி., அமைப்பில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, வாஷிங்டனில் பணியாற்றும், 1,600 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, மொத்த பணியாளர் எண்ணிக்கையில் மிகவும் சிறிய பகுதியே என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

