சீனாவை புரட்டி போட்ட சூறாவளி; 4.20 லட்சம் பேர் வெளியேற்றம்
சீனாவை புரட்டி போட்ட சூறாவளி; 4.20 லட்சம் பேர் வெளியேற்றம்
UPDATED : செப் 07, 2024 10:35 AM
ADDED : செப் 07, 2024 05:38 AM

ஹாங்காங்: சீனாவின் ஹைனான் தீவில் சக்தி வாய்ந்த சூறாவளி புயல் வீசியதன் எதிரொலியாக, நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
நம் அண்டை நாடான சீனாவில் ஹைனான் தீவுப்பகுதியில், சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதற்கு, 'யாகி' என பெயரிடப்பட்டிருந்தது. ஹைனான் தீவில் வென்சாங் நகரை நோக்கி, மணிக்கு 245 கி.மீ., வேகத்தில் இந்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக, அங்குள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களையும் இப்புயல் புரட்டிப் போட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசித்த 4,20,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி, பாதுகாப்பு அரண்களை, அந்நாட்டு மக்கள் அமைத்திருந்தனர்.
இதேபோல், ஹைனான் தீவில் உள்ள மூன்று விமான நிலையங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஹைனான் தீவில் தாக்கிய சூறாவளியால் ஒன்பது பேர் காயம் அடைந்தனர். ஹைனான் தீவை கடந்த யாகி சூறாவளி பங்செங்காங் மற்றும் வடக்கு வியட்நாம் கடற்பகுதிக்கு இடையே இன்று கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.