துபாயில் 20 நிமிடத்தில் அடுத்தடுத்து 7 முறை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
துபாயில் 20 நிமிடத்தில் அடுத்தடுத்து 7 முறை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
ADDED : ஆக 05, 2026 06:23 PM
துபாய், ஆக.6–
துபாயின் முக்கிய வர்த்தக மையமான ஜெபல் அலி தொழிற்பேட்டை பகுதியில், நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏழு முறை சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது ஜெபல் அலி தொழிற்பேட்டை. இது மிக முக்கியமான வர்த்தக மற்றும் எரிபொருள் சேமிப்பு மையமாகும்.
இங்கு துறைமுகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு பகுதியில், நேற்று அதிகாலையில், 20 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏழு முறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. தாக்கப்பட்ட இடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. ஆனால், வெடிவிபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தோ, சேதம் குறித்தோ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
துபாயில் இந்தச் சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில், ஏமனின் தலைநகரான சனாவிலும் வெடி சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் ஆதரவு பெற்ற ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், உள்ளிட்ட மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கியது. அப்போது ஹவுதி பயங்கரவாதிகள் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியதால் தற்போதும் அவர்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
