ADDED : மே 11, 2024 07:33 AM

டோக்கியோ: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் ஜப்பானில், கைவிடப்பட்டு அனாதரவாக கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஜப்பானின் உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, கிட்டத்தட்ட 90 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இது அந்நாட்டின் மொத்த குடியிருப்பு சொத்துக்களில், 13.80 சதவீதமாகும். பராமரிக்காமலும், கண்டுகொள்ளாமலும் விட்டுச் செல்லப்படும் வீடுகள், கைவிடப்பட்ட வீடுகளாக கருதப்படுகின்றன. ஜப்பானில் இதனை 'அகியா' என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் இதுபோன்ற வீடுகளில் குடியிருப்போர், வயதானவர்களாகவே இருக்கின்றனர்.
சட்டப்படி, அவர்களின் மரணத்திற்கு பின் சொத்தில் பாதி, சம்பந்தப்பட்ட நபரின் கணவன் அல்லது மனைவிக்கும், மீதமுள்ள பங்கு வாரிசுகளுக்கும் வழங்கப்படும். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியாத சூழலில், இந்த வீடுகளை எதுவும் செய்ய முடியாத நிலை நிலவுவதாக, ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜப்பானின் சிக்கலான வாரிசுரிமை உள்ளிட்ட சட்ட விவகாரங்கள், அதிக சிரமங்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீழ்ச்சி
வயதானவர்களில் சிலர், பணி ஓய்வுக்கு பின் வழங்கப்படும் வீடுகளுக்குச் சென்று விடுவதால், இந்த வீடுகளை பராமரிக்காமல் விட்டுவிடுகின்றனர். முன்பு கிராமப்புறங்களில் அதிகமாக காணப்பட்ட இந்த போக்கு, தற்போது தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலுமே அதிகமாகி வருகிறது.
வயதானவர்களின் மக்கள்தொகை மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பயங்கரமான வீழ்ச்சி ஆகியவையும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. ஜப்பானின் கண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெப்ரி ஹால் கூறும்போது, “இது ஜப்பானின் மக்கள்தொகை குறைந்து வருவதன் அறிகுறி.
இது, உண்மையில் அதிகமான வீடுகளைக் கட்டுவதால் வரும் பிரச்சனை அல்ல; கட்டிய வீடுகளில் வாழ்வதற்கு போதுமான ஆட்கள் இல்லாததால் வரும் பிரச்னை” என்று தெரிவித்தார். அவர் கூறுவது சரி என்பது போலவே, தொடர்ந்து 13வது ஆண்டாக, கடந்தாண்டும் ஜப்பானின் மக்கள் தொகை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி பாதிப்பு
ஜப்பானில், ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களின் சராசரி எண்ணிக்கை, கடந்த 2020ல் 2.21 ஆக இருந்த நிலையில், இது வரும் 2033ல் 1.99 ஆகவும்; 2050ல் 1.93 ஆகவும் மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான கைவிடப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள், அங்குள்ள வரிக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு, அதனை இடித்து மறுசீரமைப்பதைக் காட்டிலும், தக்க வைப்பது எளிது என்று கருதுகின்றனர்.
அதனால், இந்த வீடுகள் பாழடைந்த நிலையிலேயே விடப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற முடிவுகள் வேறு சில பிரச்னைகளுக்கு வழி வகுப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கைவிடப்பட்ட வீடுகளால், அப்பகுதியின் வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது. இந்த மாதிரியான இடங்களில் வீடுகளை வாங்கி விற்பது எளிதல்ல என்பதால், மொத்த பகுதியின் மதிப்பே, சந்தையில் குறைந்து விடுகிறது; வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
ஒரு புறம் சரிந்து வரும் மக்கள்தொகை, மற்றொரு புறம் கைவிடப்பட்ட வீடுகள் என, ஜப்பான் அரசு பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. ''இது, உண்மையில் அதிகமான வீடுகளை கட்டுவதால் வரும் பிரச்னை அல்ல; கட்டிய வீடுகளில் வாழ்வதற்கு போதுமான ஆட்கள் இல்லாததால் வரும் பிரச்னை ஆகும்.