தூதரக அதிகாரிகள் விவகாரம்; வெளியேற்றும் எண்ணமே இல்லை என்கிறது அமெரிக்கா!
தூதரக அதிகாரிகள் விவகாரம்; வெளியேற்றும் எண்ணமே இல்லை என்கிறது அமெரிக்கா!
UPDATED : அக் 30, 2024 03:59 PM
ADDED : அக் 30, 2024 03:48 PM

வாஷிங்டன்: இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இந்தியா தான் காரணம் என்று கனடா பிரதமர் நேரடியாக குற்றம்சாட்டியதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்திய தூதர் உட்பட 6 பேரை இந்தியா திரும்பப் பெற்றது. அதோடு, இந்தியாவில் இருந்து கனடா தூதர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே, அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனை, கொலை செய்ய முயற்சித்ததாக, இந்தியாவின் ரா அமைப்பின் முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவை அமெரிக்கா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவர் மீது பணத்திற்காக கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கெலை வழக்கில் இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கனடாவை போல, அமெரிக்காவும் இந்திய தூதராக அதிகாரிகளை வெளியேற்ற முயற்சித்ததாக தகவல் வெளியாகியது. இது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை; அப்படி ஒரு எண்ணமே இல்லை என அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

