ADDED : ஜூலை 17, 2026 09:24 PM
வாஷிங்டன்: மிகவும் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட இரண்டே நாளில், நம் நாட்டைச் சேர்ந்த பிரபல தாதா நிதிஷ் கவுஷலை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் பல பகுதிகளில், ‘ஜக்கு பகவான்பூரியா’ என்ற பெயரில் சர்வதேச குற்ற கும்பல் செயல்படுகிறது. இந்த கும்பல் கொலை, ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த கும்பலின் முக்கிய கூட்டாளியாக செயல்பட்டவர் நிதிஷ் கவுஷல். இவர், நம் நாட்டின் பஞ்சாபைச் சேர்ந்தவர் என, கூறப்படுகிறது. சமீபத்தில், அவருக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இரு நாட்களுக்கு முன், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் நிதிஷ் கவுஷலின் பெயரை சேர்த்தது. இந்நிலையில், அமெரிக்காவின் வெர்மான்ட் மாகாணத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
