14வது குழந்தைக்கு தந்தையானார் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்
14வது குழந்தைக்கு தந்தையானார் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்
ADDED : மார் 02, 2025 01:49 AM

டெக்சாஸ்: அமெரிக்க தொழிலதிபரும், அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பருமான எலான் மஸ்க், 14வது குழந்தைக்கு தந்தையானதை நேற்று உறுதிப்படுத்தினார்.
'எக்ஸ்' சமூக வலைதளம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருபவர், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் எலான் மஸ்க், 53. இவர் போர்ப்ஸ் இதழின் 2025ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் 39 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
எலான் மஸ்கிற்கும், அவரது முதல் மனைவி யான ஜஸ்டின் வில்சனுக்கும் 2002ல் ஒரு மகன் பிறந்து இறந்தான். அதன்பின் இத்தம்பதிக்கு இரு பிரசவத்தில் இரட்டையர்கள் மற்றும் மூவர் என ஐந்து குழந்தைகள் பிறந்தன. 2008ல் எலான் மஸ்க் - ஜஸ்டின் வில்சன் பிரிந்தனர்.
அதன்பின், இசைஅமைப்பாளர் கிரிம்ஸ் என்பவரை மணந்தார், மஸ்க். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரையும் பிரிந்த மஸ்க் தற்போது ஷிவான் ஜில்லிஸ் என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார்.
மஸ்க் - ஷிவான் தம்பதிக்கு ஸ்ட்ரைடர், அசூர், அர்காடியா என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நான்காவதாக மகன் பிறந்துள்ளதாகவும், அந்த குழந்தைக்கு ஷெல்டன் லைகர்கஸ் என பெயர் வைத்துள்ளதாகவும், மஸ்கின் மனைவி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டார்.
இதற்கிடையே, பிரபல எழுத்தாளரும், சமூக வலைதள பிரபலமுமான ஆஸ்லே செயின்ட் கிளேர், ஐந்து மாதங்களுக்கு முன் எலான் மஸ்கின் குழந்தையை பெற்றெடுத்ததாக அறிவித்தார்.
இதை எலான் மஸ்க் மறுக்கவில்லை. அதன்படி தற்போது 14வது குழந்தைக்கு மஸ்க் தந்தையாகி உள்ளார்.

