ADDED : ஏப் 18, 2024 01:03 AM
புதுடில்லி, பயங்கரவாதிகளை அவர்களுடைய வீடுகளுக்கே சென்று தாக்கி அழிப்போம் என, பிரதமர் மோடி கூறியுள்ளதற்கு, அமெரிக்கா பதிலளித்துள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை சகித்து கொள்ள மாட்டோம். பயங்கரவாதிகளை அவர்களுடைய வீட்டுக்கே சென்று அழிப்போம் என, கூறினார்.
பா.ஜ., மூத்த தலைவரும் ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங்கும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை கொல்வதற்கு இந்தியா முயற்சித்ததாக சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு சுமுக பேச்சின் வாயிலாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. பிரச்னைகள் தீவிரமாவதை தடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால், பேச்சு நடத்தி தீர்வு காணும்படி இரு நாடுகளையும் வலியுறுத்தி வருகிறோம்.
பயங்கரவாதி பன்னுானை கொலை செய்வதற்கு நடந்த முயற்சி தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

