ADDED : மே 19, 2024 11:47 PM
பாங்காக்: மியான்மரின் மேற்கு மாகாணமான ரக்கைனில் உள்ள நகரத்தை, இன ஆயுதக்குழுவான அராக்கன் படையினர் கைப்பற்றியுள்ளதாக அறிவித்து உள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ அரசுக்கு எதிராக உள்ளூர் இனக்குழுவினர் பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், மியான்மரின் மேற்கு பகுதியில் உள்ள ரக்கைன் என்ற மாகாணத்தில் உள்ள புதிடாங் என்ற நகரத்தை அவர்கள் கைப்பற்றியதாகவும், அங்குள்ள அனைத்து ராணுவ புறக்காவல் நிலையங்களையும் கைப்பற்றியதாகவும் நேற்று முன்தினம் இரவு அறிவித்தனர்.
அவர்கள் அந்த நகருக்கு தீ வைத்ததாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் தெரிவித்த குற்றச்சாட்டை ஆயுதக்குழு மறுத்துள்ளது. கைப்பற்றப்பட்ட நகரம், வங்கதேச எல்லையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

