அமெரிக்காவில் ஹிந்து கோவில் மீது தாக்குதல் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்
அமெரிக்காவில் ஹிந்து கோவில் மீது தாக்குதல் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்
ADDED : மார் 10, 2025 02:37 AM
நியூயார்க்,: அமெரிக்காவில், சுவாமி நாராயணன் கோவிலில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கோவில் சேதமடைந்தது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பல்வேறு இடங்களில் கோவில்களை அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
கலிபோர்னியா மாகாணத்தின் சான் பெர்னார்டினோ கவுன்டியில் உள்ள சினோ ஹில்ஸ் என்ற இடத்தில் மிக பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தினர்.
கோவில் சேதப்படுத்தப்பட்ட தகவலை, கோவிலை நிர்வகிக்கும் பி.ஏ.பி.எஸ்., என்ற ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர். மேலும், கடந்த செப்டம்பரில் கலிபோர்னியாவின் சாக்ரமென்டோ பகுதியில் ஹிந்து கோவில் தாக்குதலுக்குள்ளானதையும், அதைத் தொடர்ந்து, நியூயார்க்கின் மெல்வில்லேயில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் தாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினர். இதுவரை, 10 ஹிந்து கோவில்கள் மீது அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கோவில் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கவாழ் ஹிந்துக்களுக்கான அறக்கட்டளை என்ற அமைப்பு, 'தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., வாயிலாக விசாரணை நடத்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மற்றொரு ஹிந்து அமைப்பான, வட அமெரிக்க ஹிந்து கூட்டமைப்பினர், 'இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட அமைப்பினரின் செயல் இது.
'லாஸ் ஏஞ்சல்ஸில், 'காலிஸ்தான் ஓட்டெடுப்பு' நடத்துவதாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் கூறிக்கொண்டு இருக்கும் நாள் நெருங்கி வருவதால், இதுபோன்ற தாக்குதல் நடைபெறுகிறது' என்றனர்.