ADDED : மார் 01, 2025 04:22 AM

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் இயக்கம், நேற்று அரசியல் கட்சியாக மாறியது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நம் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால் வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் நிர்வாகம் நடக்கிறது.
இதில் மாணவர் இயக்க தலைவர் நஹித் இஸ்லாம் செய்தி மற்றும் ஒலிபரப்பு துறையின் ஆலோசகராக பதவி வகித்தார். அவர் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். புதிதாக அரசியல் கட்சியை அவர் துவங்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டாக்காவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் நஹித் இஸ்லாம், தேசிய குடிமக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை துவக்கினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவர் செயல்படுவார். அதன் முக்கிய பொறுப்புகளில் மாணவர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குர்ஆன், பகவத் கீதை, பைபிள் மற்றும் புத்த மத நுாலான திரிபிடகம் ஆகியவற்றின் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின், கட்சி துவக்க விழா ஆரம்பமானது. நிகழ்ச்சியில் சில அரசியல் கட்சியின் தலைவர்கள், வாடிகன் மற்றும் பாகிஸ்தான் துாதர் ஆகியோர் பங்கேற்றனர்.
அதன்பின் நஹித் இஸ்லாம் பேசுகையில், “வங்கதேசத்தில் இனி இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவான அரசியலுக்கு இடம் கிடையாது. வங்கதேச மக்களின் நலனை முன்னிறுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம்,” என்றார்.