எல்லையில் அத்துமீறிய கடத்தல் கும்பல்; துப்பாக்கிச்சூட்டில் வங்கதேச நபர் பலி
எல்லையில் அத்துமீறிய கடத்தல் கும்பல்; துப்பாக்கிச்சூட்டில் வங்கதேச நபர் பலி
ADDED : மார் 02, 2025 12:59 AM

அகர்த்தலா : நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவை ஒட்டி, நம் அண்டை நாடான வங்கதேசத்தின் எல்லைப்பகுதி அமைந்துள்ளது.
இங்கு, அந்நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இதையடுத்து, திரிபுராவின் செபாஹிஜலா மாவட்டத்தின் பூடியாவில் உள்ள எல்லைப்பகுதியில் பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 20க்கும் மேற்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல், நம் எல்லைக்குள் நேற்று அத்துமீறி ஊடுருவ முயன்றது.
இதையறிந்த எல்லை பாதுகாப்பு படையினர், அக்கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி அக்கும்பல் துப்பாக்கியால் சுட்டு, அவர்களின் ஆயுதங்களை பறிக்க முயன்றது. இதில், படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கைக்காக அந்த கும்பல் மீது எல்லை பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், அக்கும்பலில் இருந்த வங்கதேச நபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
மற்றவர்கள் தப்பியோடினர். படுகாயமடைந்த அந்த நபரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.