ADDED : ஜூன் 29, 2024 01:22 AM

வரும் நவம்பரில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காண, தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, தீவிர முயற்சியில் உள்ளனர். சி.என்.என்., தொலைக்காட்சி ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சியில், இருவரும் ஒரே மேடையில் நேருக்கு நேர் நின்று நடத்திய விவாதத்தின் போது, காதில் ரத்தம் வரும் அளவுக்கு கொச்சையாக ஒருவரை ஒருவர் விமர்சித்தது, உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பைடன்: பொதுவெளியில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர்; மனைவி கர்ப்பமாக இருந்தபோது, ஆபாச பட நடிகையுடன், 'ஜல்சா' செய்ததற்காக பல நுாறு கோடி டாலர் அபராதம் செலுத்தி, தண்டனை பெற்றவருக்கு பேச என்ன தகுதி இருக்கு?
டிரம்ப்: நானா தண்டனை பெற்றவன். இறந்துபோன உங்கள் மகன் மட்டும் என்ன ஒழுங்கா? அவரும் தண்டனை பெற்றவர் தான். உங்களுக்கு விரைவில் தண்டனை காத்திருக்கு.
பைடன்: 'நான் பழிவாங்கப் போகிறேன்' என, எந்த அமெரிக்க அதிபராவது இதுவரை கூறி நீங்கள் கேட்டதுண்டா. ஜனநாயகம் குறித்து அடிப்படை அறிவு கூட இல்லை இவருக்கு.
டிரம்ப்: தன் முட்டாள்தனமான குடியேற்ற கொள்கைகளால் எல்லைகளை திறந்துவிட்டீர்கள். இங்கு ஊடுருவல்காரர்கள் நட்சத்திர விடுதிகளில் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் தெருவில் அல்லல்படுகின்றனர்.
பைடன்: பொய்... இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பொய். முன்னாள் ராணுவ வீரர்கள் முன்பை விட நலமாகவே உள்ளனர். அவர்களுக்கு இப்போது காப்பீடு கூட இருக்கிறது. முட்டாள் மாதிரி பேசக்கூடாது.
டிரம்ப்: நானா முட்டாள்... என் ஆட்சியில் நாடு கடந்து சென்று பயங்கரவாதிகளை கொன்று குவித்துள்ளோம். உங்கள் ஆட்சியில் நியூயார்க் நகரில் புகுந்த பயங்கரவாதிகள் நம் மக்களை கொல்கின்றனர். அந்த லட்சணத்தில் இருக்கிறது உங்கள் குடியேற்ற கொள்கை.