சாம்பியன்ஸ் டிராபி : ஆஸி.,யை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி : ஆஸி.,யை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி
UPDATED : மார் 05, 2025 06:50 AM
ADDED : மார் 04, 2025 09:36 PM

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்றைய அரையிறுதியில் கோலி 84 ரன் விளாச, 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்கின்றன. நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதில் கூப்பர் கொனாலி, தன்வீர் சங்கா இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி கொடுத்தார் ஷமி. இவரது 'வேகத்தில்' கூப்பர் கொனாலி (0) வெளியேறினார். பின் டிராவிஸ் ஹெட் 'வேலையை' காட்டினார். ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஒரு பவுண்டரி சிக்சர் அடித்தார். ஷமி ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார். குல்தீப் தந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். ஆஸ்திரேலியா 6 ஓவரில் 53/1 ரன் எடுத்தது.
வருண், கில் கலக்கல்இந்த சமயத்தில் 'சுழல் மாயாவி' வருண் சக்ரவர்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது முதல் ஓவரின் 2வது பந்தை அவசரப்பட்டு துாக்கி அடித்தார் ஹெட். 'லாங்-ஆன்' திசையில் இருந்து முன்னோக்கி 3.81 வினாடியில் 23 மீ., ஓடி வந்த சுப்மன் கில், கலக்கல் 'கேட்ச்' பிடிக்க, ஹெட் (39) வெளியேறினார். 'கேட்ச்' பிடித்த அதே வேகத்தில் பந்தை எறிந்தார் கில். இது சர்ச்சையானது. சிறிது நேரம் பந்தை கையில் வைத்திருக்க வேண்டும் என கில்லை அம்பயர்கள் எச்சரித்தனர்.ஐ.சி.சி., நாக்-அவுட் போட்டிகளில் தொல்லை கொடுத்து வந்த ஹெட், விரைவில் நடையை கட்டியதால், இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். பின் கேப்டன் ஸ்மித், லபுசேன் சேர்ந்து மந்தமாக ஆடினர்.
ஸ்மித், கேரி அரைசதம்ரவிந்திர ஜடேஜா வலையில் லபுசேன் (29) சிக்கினார். ஸ்மித் 68 பந்தில் அரைசதம் எட்டினார். ஜடேஜா பந்தில் 'ஆபத்தான' ஜோஷ் இங்லிஸ் (11) அவுட்டானார். மீண்டும் பந்துவீச வந்த ஷமி இம்முறை ஸ்மித்தை (73, 4x4, 1x6) போல்டாக்கினார். ஆஸ்திரேலியா 37 ஓவரில் 198/5 ரன் எடுத்திருந்தது. அப்போது மேக்ஸ்வெல் களமிறங்க, 300 ரன் எட்ட வாய்ப்பு இருந்தது. அக்சர் பந்தில் ஒரு சிக்சர் அடித்த மேக்ஸ்வெல் (7), அடுத்த பந்தில் போல்டாக, சிக்கல் ஏற்பட்டது. தனிநபராக போராடிய அலெக்ஸ் கேரி நம்பிக்கை தந்தார். 48 பந்தில் அரைசதம் அடித்தார். டிவார்ஷியஸ், 19 ரன் எடுத்தார். கேரி (61, 8x4, 1x6) ரன் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 264 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
கோலி 84 ரன்சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் திணறியது. சுப்மன் கில் (8) ஏமாற்றினார். இரண்டு முறை 'கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய கேப்டன் ரோகித் சர்மா (28), கொனாலி வலையில் சிக்கினார். இந்தியா 8 ஓவரில் 42/2 ரன் எடுத்தது.பின் அனுபவ கோலி, ஸ்ரேயாஸ் சேர்ந்து அசத்தினர். எவ்வித 'ரிஸ்க்' எடுக்காமல் அழகாக ரன் சேர்த்தனர். ஜாம்பா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோலி 53 பந்தில், ஒருநாள் அரங்கில் 74வது அரைசதம் எட்டினார். ஸ்ரேயாஸ் 45, அக்சர், 27 ரன் எடுத்தனர். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் 'சேஸ் கிங்' கோலி அசராமல் ஆடினார். இவர், 84 ரன்னுக்கு (5x4) அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
பாண்ட்யா அதிரடிகடைசி கட்டத்தில் ராகுல், ஹர்திக் பாண்ட்யா மிரட்டினர். ஜாம்பா ஓவரில் வரிசையாக இரண்டு இமாலய சிக்சர் விளாசிய பாண்ட்யா பதட்டத்தை தணித்தார். பாண்ட்யா 28 ரன் எடுத்தார். மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராகுல், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (42), ஜடேஜா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
வரும் 9 ம் தேதி நடக்கும் பைனலுக்கு முதல் அணியாக இந்திய அணி தகுதி பெற்றது.
ரசிகர்கள் உற்சாகம்
2023ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி ஆஸி.,யிடம் வீழ்ந்தது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸி., அணியை இந்தியா பழிவாங்கிவிட்டதாக கூறி ரசிகர்கள் கூறியுள்ளனர். பட்டாசு வெடித்து இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
யாருடன் மோதல்
நாளை லாகூரில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 9 ம் தேதி துபாயில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்