குழந்தை கொலை வழக்கு: இந்தியப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
குழந்தை கொலை வழக்கு: இந்தியப்பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ADDED : மார் 03, 2025 05:38 PM

அபுதாபி: குழந்தையை கொன்றதாக கைது செய்யப்பட்ட 33 வயது உ.பி., மாநில பெண்ணுக்கு, ஐக்கிய அரசு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த ஷாஸாதி கான், 33, குழந்தையை கொலை செய்த வழக்கில் அபுதாபி நகரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது பாதுகாப்பில் இருந்த ஆண் குழந்தையை கொலை செய்ததாக, பெற்றோர் அளித்த புகாரில் அவர் மீது வழக்கு பதிவாகியிருந்தது.
வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம், 2023ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்தாண்டு அவரது மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அவர் வாத்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை காப்பாற்றவும், நீதிமன்றத்தில் வழக்கு நடத்தவும் இந்திய துாதரகம் சார்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன.
எனினும், மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த அந்நாட்டு நீதிமன்றம், அவரது மரண தண்டனையை உறுதி செய்தது. அவரது மரண தண்டனை பிப்.,15ல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில், டில்லி உயர்நீதிமன்றத்தில் இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.அவரது குடும்பத்தினர், அமீரகம் சென்று இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.