குரங்கம்மைக்கு எதிரான தடுப்பூசி பரிசோதனைக்கு சீனா அனுமதி
குரங்கம்மைக்கு எதிரான தடுப்பூசி பரிசோதனைக்கு சீனா அனுமதி
ADDED : செப் 11, 2024 06:38 AM

பீஜிங்: சீனாவில் குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டு தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் எம் - பாக்ஸ் எனப்படும், குரங்கம்மை பரவி வருகிறது. குரங்கம்மையைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சில தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் குரங்கம்மைக்காக முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை ஆய்வக சோதனைக்கு உட்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்துள்ள அந்நாட்டின் தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஷாங்காய் இன்ஸ்டிட்யூட் ஆப் பயோலாஜிக்கல் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சினோபார்ம் வாயிலாக நிர்வகிக்கப்படும் தடுப்பூசி குரங்கம்மையை குணப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது. இந்த தடுப்பூசியை சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஒரு தடுப்பூசி பொதுவான சந்தை அங்கீகாரத்தை பெற மூன்று கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான காலத்தை நிர்ணயிக்க முடியாது. விரைவில் சந்தைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

