ADDED : ஜூன் 08, 2024 11:42 PM

இஸ்லாமாபாத்: சீனா - பாகிஸ்தான் வழித்தட திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியில், உயர்தர வளர்ச்சியை மேற்கொண்டு விரைவில் முடிக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஐந்து நாள் அரசு முறை பயணமாக நம் அண்டை நாடான சீனாவுக்கு சென்றுஉள்ளார்.
அங்கு அந்நாட்டு பிரதமர் லீ கிகியாங்கை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக, தலைநகர் பீஜிங்கில் சீன அதிபர் ஜின்பிங்கை, ஷெபாஸ் ஷெரீப் நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இரு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர். குறிப்பாக சீன - பாகிஸ்தான் வர்த்தக வழித்தட திட்டத்தை மேம்படுத்தவது குறித்து ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஜின்பிங் பேசியதாக கூறப்படுகிறது.
இடையூறுகளில் இருந்து அந்த திட்டத்தை பாதுகாக்க இருவரும் உறுதி எடுத்துக் கொண்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குவாடர் துறைமுகத் திட்டத்தின் முக்கியத்துவத்துவம் குறித்து, கருத்துக்களை பரிமாறிக் கொண்ட தலைவர்கள், அதன் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை உயர்தர வளர்ச்சியை மேற்கொண்டு, உரிய நேரத்தில் முடிப்பது தொடர்பாக பேச்சு நடத்தினர்.
பொருளாதார சீர்திருத்தம் மற்றும் நீடித்த வளர்ச்சி, தொழில்துறை மேம்பாடு, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் பிராந்திய இணைப்பு மற்றும் பாகிஸ்தானின் வளர்ச்சியில், வர்த்தக வழித்தட திட்டம் ஆற்றிய முக்கிய பங்கு குறித்து சீன அதிபரிடம், ஷெபாஸ் ஷெரீப் விளக்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாவட்டங்களை இணைக்கும் குவாடர் துறைமுகத்தில் நடந்து வரும் வர்த்தக வழித் தட திட்டத்துக்கு, உள்ளூர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அங்கு பணியாற்றும் சீனர்களை குறிவைத்து, பயங்கரவாத தாக்குதல்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதனால், இந்த திட்டத்தை முன்னெடுத்து நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்ட சூழலில், அதை பாதுகாக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.