போரை நீங்கள் விரும்பினால் அதற்கும் தயார்: அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு சீனா பதிலடி
போரை நீங்கள் விரும்பினால் அதற்கும் தயார்: அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு சீனா பதிலடி
ADDED : மார் 06, 2025 01:09 AM

பீஜிங்: சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தர விட்டுள்ளார். மேலும், தங்கள் பொருட்களுக்கு சீனா விதிக்கும் வரிக்கு இணையாக பரஸ்பர வரியை விதிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு, 'நீங்கள் போரை விரும்பினால், அதற்கு தயார். அது வர்த்தகம், வரி அல்லது எந்த வடிவில் இருந்தாலும் சரி, இறுதி வரை பார்த்துவிடுவோம்' என, சீனா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜன., 20ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, தன் நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது, பரஸ்பரம் அதே அளவு வரியை விதிக்கப் போவதாக கூறியிருந்தார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்கனவே 10 சதவீதம் கூடுதல் வரியை அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மேலும் 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தார்.
இதற்கு உடனடி பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா மீது 15 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக சீனா அறிவித்தது.
இந்நிலையில், அந்த நாட்டின் பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் நேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ''நம் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, பரஸ்பரம் அதே அளவு வரியை விதிப்போம். இது, ஏப்., 2 முதல் அமலுக்கு வருகிறது,'' என்றார்.
ஏற்கனவே, சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் டொனால்டு டிரம்புக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. 'கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவியதற்கு சீனாவே காரணம்' என, அப்போது அதிபராக இருந்த டிரம்ப் கூறியிருந்தார்.
மருத்துவ அறுவை சிகிச்சைகளின்போது, மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணியாக பயன்படுத்தும், 'ஓபியாட்' வகை மருந்துகள் அதிகமாக செலுத்தப்படுவதால் அமெரிக்காவில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதில் முக்கியமானது, 'பென்டானில்' எனப்படும் மருந்துக்கு தேவையான ரசாயனங்களை, சீனாவே அதிகளவு ஏற்றுமதி செய்கிறது. இதை நிறுத்தும்படி சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவுகளுக்கு கடுமையான வார்த்தைகளுடன் பதிலளித்து, சீன வெளியுறவுத் துறை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு அந்த நாடே பொறுப்பாகும். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல், அவர்களுக்கு உதவும் வகையில் செயல்படும் எங்களுடைய முயற்சிகளை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. அதற்கு மாறாக எங்கள் மீது பழி போடுகின்றனர்.
இதற்காக, நெருக்கடி கொடுப்பது, மிரட்டி பார்ப்பது போன்றவற்றுக்கு வரி உயர்வை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு உதவியதற்காக எங்களுக்கு தண்டனை கொடுக்கின்றனர்.பென்டானில் மருந்து பிரச்னையை காரணம் காட்டுவது, பொய் நாடகம்.
சீனாவை சீண்டிப் பார்க்கலாம், தூண்டிப் பார்க்கலாம் என்று யாராவது விஷமத்தனம் செய்தால், அது எடுபடாது. பென்டானில் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, எங்களையும் சமமாக மதித்தால், அதற்கு உதவுவதற்கு தயாராக உள்ளோம்.
துாண்டிப் பார்ப்பதால், எங்களை பயமுறுத்த முடியாது. சீண்டி பார்ப்பது எடுபடாது. நெருக்கடி கொடுப்பது, மிரட்டல் விடுப்பது, பயமுறுத்துவது போன்றவை, சீனாவை கையாள்வதற்கான சரியான முறையாக இருக்காது.
அவ்வாறு அதிக நெருக்கடி கொடுத்தால், அவர்கள் சீனாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை, தப்புக் கணக்கு போடுகின்றனர் என்று அர்த்தம்.போரை நீங்கள் விரும்பினால், அதற்கும் நாங்கள் தயார். வர்த்தக ரீதியாகவோ, வரி ரீதியாகவோ அல்லது எந்த வழியில் இருந்தாலும், இறுதி வரை ஒரு கை பார்க்க சீனா எப்போதும் தயார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.