இந்திய விரோத அமெரிக்க பெண் எம்.பி.யுடன் ராகுல் சந்திப்பால் சர்ச்சை
இந்திய விரோத அமெரிக்க பெண் எம்.பி.யுடன் ராகுல் சந்திப்பால் சர்ச்சை
ADDED : செப் 11, 2024 08:49 PM

வாஷிங்டன்: அமெரிக்க சென்றுள்ள லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகொண்ட இலன் ஒமர் என்ற பாக்., ஆதரவு அமெரிக்க பெண் எம்.பி.யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராகுலுக்கு எதிராக மீண்டும் கண்டனம் எழுந்துள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சித்தலைவரான ராகுல், நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை கடுமையாக விமர்சித்தும், மதம், ஜாதி, மொழி குறித்த சர்ச்சை பேச்சும் பேசினார். ராகுலின் பேச்சு பிரிவினையை தூண்டும் விதமாக உள்ளதாக பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய பெண் எம்.பி.க்களை ராகுல் சந்தித்தார் இதன் புகைப்படம் வெளியானது. இதனை பா.ஜ.,வின் அமித் மாலவியா ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் இலன் ஒமர் என்ற பெண் எம்.பி.,உள்ளார்.
இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சேசாத் பொன்னவாலா ‛எக்ஸ் ' வலைதளத்தில் கூறியது, புகைப்படத்தில் அமெரிக்கா பெண் எம்.பி., இலன் ஒமர் உள்ளார். இவர் பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் , இந்தியாவிற்கு எதிராக விஷம பிரசாரம் செய்து வருகிறார்.
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு தொடர்பாக அமெரிக்கா பார்லிமென்ட்டில் தீர்மானமும் கொண்டு வந்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு பல முறை சென்றுள்ளார். ராகுல் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும் போது இந்தியா எதிர்ப்பாளராக மாறுவது ஏன் ? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

