ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு: காங்கோவில் மூவர் சுட்டுக்கொலை
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு: காங்கோவில் மூவர் சுட்டுக்கொலை
ADDED : மே 19, 2024 11:32 PM

கின்ஷாசா: ஆட்சியை கவிழ்க்க நடந்த முயற்சியை முறியடித்ததாகவும், துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் காங்கோ நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்க நாடான காங்கோவில், கடந்தாண்டு டிசம்பரில் நடந்த தேர்தலில், பெலிக்ஸ் திஷேக்டி மீண்டும் அதிபராக பதவியேற்றார்.
ஒத்திவைப்பு
ஆனால், இதுவரை, தன் அரசை அவர் அறிவிக்கவில்லை. இது ஆளும் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பார்லிமென்ட் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
தனிப்பெரும்பான்மை உள்ள நிலையிலும், கூட்டணி கட்சித் தலைவர்களை அதிபர் பெலிக்ஸ் திஷேக்டி நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். சபாநாயகர் பதவி தொடர்பாக தொடர்ந்து பிடிவாதம் காட்டினால், ஆட்சியைக் கலைத்து மீண்டும் தேர்தலை அறிவிக்கப் போவதாக, அதிபர் பகிரங்கமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பார்லிமென்ட் எம்.பி.,யும், சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் மூத்த அரசியல் தலைவர் விடால் கமார்ஹே வீட்டின் அருகே, நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சண்டை நடந்தது.
ராணுவத்தினர், கைது செய்யும் நோக்கத்தோடு அவருடைய வீட்டை முற்றுகையிட முயன்றதாகவும், அவருடைய தனிப்பட்ட பாதுகாப்புப் படையினர், அதை முறியடித்ததாகவும், அவருடைய கட்சியினர் தெரிவித்தனர்.
விடால் கமார்ஹே மற்றும் குடும்பத்தார் பாதுகாப்பாக இருப்பதாக, அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
பாதுகாப்பு
இதற்கிடையே, ஆட்சியைக் கவிழ்க்க, மூத்த அரசியல் தலைவர் விடால் கமார்ஹே முயன்றதாகவும், அவருடைய தனிப்பட்ட பாதுகாப்புப் படையின் முயற்சி, முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதாகவும், காங்கோ ராணுவம் கூறியுள்ளது.
இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில், மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நாடு தற்போது, அரசு மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ராணுவம் தெரிவித்துள்ளது.

