களை கட்டியது அமெரிக்க தேர்தல்; கூடியது ஜனநாயக கட்சி மாநாடு; அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகிறார் கமலா!
களை கட்டியது அமெரிக்க தேர்தல்; கூடியது ஜனநாயக கட்சி மாநாடு; அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகிறார் கமலா!
ADDED : ஆக 19, 2024 07:04 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோவில் இன்று (ஆகஸ்ட் 19) ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு துவங்குகிறது. அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். 50 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். குடியரசு கட்சியினர் மில்வாக்கியில் தங்கள் மாநாட்டை நடத்தி முடித்து, ஒரு மாதத்திற்கு பிறகு இன்று, சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு துவங்குகிறது. 4 ஆயிரம் பிரதிநிதிகள் உட்பட 50 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிபர் வேட்பாளர்
அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதால், ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். சர்ச்சை நாயகனான டிரம்ப் பிரசாரத்தில், கமலா ஹாரிசின் தோற்றம், இனம் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருவதற்கு பதிலடி கொடுப்பார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பேச்சாளர்கள் யார்?
மாநட்டில், அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் மற்றும் கவுரவ சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
ஏற்பாடுகள் எப்படி?
ஜோ பைடனின் நெருங்கிய உதவியாளர் அஜய் பூடோரியா கூறியதாவது: முதல் கறுப்பின பெண்மணியும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ் வேட்பு மனுவை ஏற்க உள்ளார். நிறைய முக்கியமான விஷயங்கள் நடக்க உள்ளது.
இது நாட்டிற்கு ஒரு அழகான அற்புதமான தருணம். மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார். அதிபர் தேர்தல் நடக்க 2 மாதங்களுக்கு மேல் இருந்தாலும், தற்போதே பிரசாரம் களைகட்டியுள்ளது.