சென்னையில் இருந்து நேரடி விமான சேவை: புருனே பயணத்தில் பிரதமர் மோடி ஒப்பந்தம்
சென்னையில் இருந்து நேரடி விமான சேவை: புருனே பயணத்தில் பிரதமர் மோடி ஒப்பந்தம்
ADDED : செப் 05, 2024 12:28 AM

பண்டார் செரி பெகாவான்: பிரதமர் நரேந்திர மோடியின் புருனே பயணத்தின்போது, அந்த நாட்டின் தலைநகர் பண்டார் செரி பெகாவான் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி விமான சேவை துவக்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே மிகவும் சிறிய நாடான புருனே, எண்ணெய் வளம் அதிகம் உள்ள, இயற்கை எழில் கொஞ்சும் குட்டித் தீவு. மன்னராட்சி நடக்கும் இந்த நாட்டின் சுல்தான் மிகப் பெரும் பணக்காரர். நாடு முழுதும் வளங்கள் கொழிப்பதால், அங்கு வருமான வரியே கிடையாது.
புருனேவுடனான தூதரக உறவு, 40 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், முதல் இந்தியப் பிரதமராக, நரேந்திர மோடி அங்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டின் சுல்தான் ஹசனல் போல்கியாவுடன், இரு தரப்பு உறவுகள், சர்வதேச பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
தென் சீனக் கடலின் பெரும்பகுதியை, நம் அண்டை நாடான சீனா தனக்கு சொந்தம் என்று உரிமை கோரி வருகிறது. இதற்கு, அந்தப் பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ், மலேஷியா, வியட்நாம், புருனே, தைவான் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சுல்தானுடனான சந்திப்புக்குப் பின், பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:
இந்தியா - புருனே இடையேயான நட்பு மிகவும் வலுவானது. பல்வேறு விஷயங்களில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்துக்களை கொண்டுள்ளன. இந்தியா எப்போதும் வளர்ச்சியையே தன் கொள்கையாக வைத்துள்ளது. மற்ற நாடுகளை ஆக்கிரமித்து, தன் எல்லையை விரிவுபடுத்தும் நோக்கம் கிடையாது. கடல் பகுதிகளில் அனைத்து தரப்பினருக்கும் சுதந்திரமாக, சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்த வேண்டும் என்பதில், இரு நாடுகளும் ஒரே நிலைப்பாடை கொண்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு, தற்போது மேம்படுத்தப்பட்ட கூட்டாளி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. ராணுவம், தொழில், வர்த்தகம், முதலீடுகள் தொடர்பாக இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கை நோக்கி எனப்படும் கிழக்கே உள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பு என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதுபோல, ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்புடனும் இணைந்து செயல்படுகிறோம். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஒத்துழைப்புக்கு வலுசேர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை வலியுறுத்தும் வகையில், கூட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கான ஆசியான் மையத்தை நிர்வகிப்பதில் புருனேயின் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவுக்கு புருனே சுல்தான் பாராட்டு தெரிவித்தார்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் செலுத்து வாகனங்களுக்கான கண்காணிப்பு, தொலைக் கட்டளை நிலையத்தை புருனேயில் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
புருனே தலைநகர் பண்டார் செரி பெகாவானுக்கும், சென்னைக்கும் இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பிரதமரை கவுரவிக்கும் வகையில் புருனே சுல்தான் அரசு முறை மதிய விருந்தளித்தார். இந்தியாவுக்கு வரும்படி, புருனே சுல்தானுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
புருனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, மற்றொரு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு நேற்று மாலை சென்றடைந்தார். அந்த நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வாங்கை அவர் சந்தித்தார்.