நடுநிலையான வெளியுறவுக்கொள்கை; இலங்கை அதிபர் அனுரா திட்டவட்டம்!
நடுநிலையான வெளியுறவுக்கொள்கை; இலங்கை அதிபர் அனுரா திட்டவட்டம்!
ADDED : செப் 24, 2024 02:12 PM

கொழும்பு: 'இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க நடுநிலையான வெளியுறவுக்கொள்கை அவசியம்' என இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே, 56, அந்நாட்டின் அதிபராக நேற்று பதவியேற்றார். அவரது அரசு, சீனா, இந்தியா என எந்த நாட்டுடனும் அணி சேராமல் இருக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஊடக பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: புவி அரசியல் போட்டியில் இருந்து விலகி, சமநிலையை பேணவே அரசு விரும்புகிறது. புவி அரசியலில் நாங்கள் ஒரு போட்டியாளராக இருக்க மாட்டோம். இந்தியா, சீனா இடையிலான போட்டியில் எந்த தரப்புடனும் இணைந்திருக்க நாங்கள் விரும்பவில்லை. இரு நாடுகளுமே எங்களது மதிப்புக்குரிய நண்பர்கள் தான்.
இறையாண்மை
இருவருமே எங்களது நெருங்கிய பங்குதாரர்களாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.எந்த நாட்டிற்கும் எதிராக இருக்க மாட்டோம். நாங்கள் ஐரோப்பிய ஒன்றியம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுடன் உறவுகளைப் பேண விரும்புகிறோம். அதிகரித்துவரும் பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நடுநிலையான வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை அவசியமானது.உலக வல்லரசு நாடுகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டியில் இலங்கை ஒருபோதும் ஈடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

