விமானத்தில் உயிரிழந்த பெண் சடலத்துடன் 4 மணி நேரம் பயணித்த சக பயணியர்
விமானத்தில் உயிரிழந்த பெண் சடலத்துடன் 4 மணி நேரம் பயணித்த சக பயணியர்
UPDATED : மார் 02, 2025 12:53 AM
ADDED : மார் 02, 2025 12:51 AM

தோஹா: நடுவானில் விமானத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இருக்கையில் அமர வைத்து எடுத்து வந்த, 'கத்தார் ஏர்வேஸ்' நிறுவனம் மீது பயணியர் புகார் கூறிய நிலையில், இழப்பீடு வழங்குவதாக விமான நிறுவனம் தெரிவித்தது.
பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து மேற்காசிய நாடான கத்தார் தலைநகர் தோஹாவுக்கு 'கத்தார் ஏர்வேஸ்' விமானம் சமீபத்தில் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில், கழிவறைக்குச் சென்ற பெண் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, விமானத்தை வழியில் எங்கும் தரை இறக்காமலேயே, பெண் சடலத்துடன் தோஹா வரையிலும் அந்த விமானம் இயக்கப்பட்டது.
இதனால், அந்த சடலம் இருந்த இருக்கையின் அருகிலேயே இருந்த மைக்கேல் ரிங், ஜெனிபர் கோலின் தம்பதியினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இத்தாலியைச் சேர்ந்த அவர்கள் கூறியதாவது:
விமானம் தரை இறங்குவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், அந்த பெண் உயிரிழந்தார். உடனே, முழுதும் போர்வையால் சுற்றி, அந்த பெண்ணின் உடலை, எங்கள் இருக்கையின் அருகே விமான பணியாளர்கள் அமர வைத்தனர்.
முதலில் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நிலைமையை உணர்ந்தபோது, கடும் அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது. காலியாக இருந்த வேறு இருக்கைக்கும் எங்களை மாற்ற அனுமதிக்கவில்லை.
அந்த பெண் பயணியின் மரணம் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் விமான நிறுவனத்தின் நிலைமை எங்களுக்கு புரிகிறது. அதே நேரத்தில், விமானத்தில் இருந்த மற்ற பயணியர் மனநிலையையும் பரிசீலித்திருக்க வேண்டும்.
விமானம் தரை இறங்கியதும், பயணியர் வெளியேறிய பின் சடலத்தை இறக்குவர் என நினைத்தோம். ஆனால், பயணியர் யாரும் இறங்க வேண்டாம் என விமான ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். போலீசாரும், மருத்துவ ஊழியர்களும் விமானத்துக்குள் வந்து, அந்த பெண்ணின் சடலத்தை இறக்கும் வரை நாங்கள் இருக்கையிலேயே அமர வைக்கப்பட்டோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே விமான நிறுவனம் அளித்த விளக்கம்:
பயணியர் விமானத்தில், இதுபோன்று எதிர்பாராத விதமாக பயணியர் உயிரிழப்பது துரதிர்ஷ்டவசமானது. அத்தகைய சூழ்நிலையை கையாளுவதற்கு, எங்களின் பணியாளர்கள் மிகுந்த பயிற்சி பெற்றுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் அருகே, விமான பணியாளர் ஒருவர், முழு நேரமும் அமர்ந்திருந்தார்.
இந்த சம்பவத்தால் மற்ற பயணியருக்கு மன அழுத்தமோ, அசவுகரியமோ நேரிட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறோம். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பயணியருக்கு இழப்பீடு வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.