ADDED : மே 04, 2024 11:37 PM

இஸ்லாமாபாத்: நம் நாட்டின் பழமையான உடல், மன மற்றும் ஆன்மிக பயிற்சியான யோகாவை, பாகிஸ்தான் அரசு முதல் முறையாக இலவசமாக பயிற்றுவிக்கிறது.
யோகா கலை பொதுவாக இந்தியாவுடன் தொடர்புடையது. இன்று இதை உலகம் முழுதும் பலரும் ஆர்வமுடன் பயிற்சி செய்து வருகின்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் யோகாவை முறையாக கற்று தரும் நிறுவனங்கள் இல்லை. முஸ்லிம் நாடு என்பதால் இதற்கு சில தரப்பில் எதிர்ப்பும் எழுந்தது.
இருப்பினும், தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக யோகா பயிற்சிகளை ஆர்வம் உள்ளவர்கள் கற்கின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதை பராமரிக்கும் அமைப்பான, தலைநகர் வளர்ச்சி ஆணையம், அங்கு உள்ள பாத்திமா ஜின்னா பூங்காவில் இலவச யோகா வகுப்புகளை துவக்கிஉள்ளது.
பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச யோகா வகுப்புகளில் சேர்ந்து கற்றுக்கொள்ளலாம் என அந்த ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பூங்காவுக்கு வருபவர்கள் கூறுகையில், 'தலைநகரின் முக்கிய பூங்காவில் இலவச யோகா வகுப்பை அரசே துவங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. இது இந்தியாவுக்கு நேர்மறை செய்தியை பரப்பி, இரு தரப்பு உறவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்' என்றனர்.